25 வயதுக்குட்பட்டவர்கள் ஒரு கோடி முறை கோவிந்த நாமத்தை எழுதினால், அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் விஐபி தரிசன வசதி ஏற்படுத்தித் தரப்படும் என்று திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புதியதாக நியமிக்கப்பட்டுள்ள அறங்காலவர் குழுவின் முதல் கூட்டம் தலைவர் கருணாகர ரெட்டி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
கூட்டத்திற்குப் பின் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கருணாகர ரெட்டி பேசியதாவது, “சனாதன தர்மம் என்பது ஹிந்துக்கள் முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று. இளைஞர்களிடையே ஹிந்து பக்தியைப் பரப்பும் நிகழ்ச்சிகளை ஏழுமலையான் கோவிலிலிருந்து தொடங்க உள்ளோம்.
இராமகோடி பாணியில் கோவிந்த கோடியை எழுதும் 25 வயதுக்குட்பட்ட இளைஞா்களுக்கும் அவா்களின் குடும்ப உறுப்பினா்களுக்கும், விஐபி தரிசனத்திற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்துதரப்படும்.
மேலும், 10 லட்சத்து ஆயிரத்து 116 முறை கோவிந்த நாமங்கள் எழுதியவா்களுக்கு விஐபி தரிசனத்திற்கான ஏற்பாடு செய்துதரப்படும்.
ஏழுமலையானின் வருடாந்திர பிரம்மோற்சவம் செப்டம்பா் 18-ந் தேதி தொடங்கும் நிலையில் ஆந்திர முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி பட்டு வஸ்திரம் சமா்ப்பிக்க உள்ளாா். 2024-ஆம் ஆண்டிற்கான நாட்காட்டிகள், தினசரிகள் வெளியிடப்பட உள்ளன.
மும்பை பாந்த்ராவில் ரூ.5.35 கோடியில் தேவஸ்தான தகவல் மையம் மற்றும் ரூ.1.65 கோடியில் ஏழுமலையான் கோயில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
திருப்பதியில் உள்ள பழைமையான 3 சத்திரங்களுக்குப் பதிலாக, ரூ.600 கோடியில், அச்யுதம், ஸ்ரீபாதம் குடியிருப்பு வளாகங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக” அவர் தெரிவித்தார்.