உலகையே டெக் மோகத்தில் மூழ்கவைத்த மெகா நிறுவனங்கள் என்றால் ஆப்பிள், மெட்டா, ஆப்ல்ஃபபெட், பைட் டேன்ஸ், மைக்ரோசாஃப்ட் ஆகியவைதான்.
இந்த நிறுவனங்களில் செயலிகள், மென்பொருட்கள் இல்லாத இடங்களே இல்லை. விளம்பர வருவாய் மூலம் இந்த நிறுவனங்கள் ஆண்டுக்கு பலகோடி டாலர் லாபத்தை பல நாடுகளில் ஈட்டி வருகின்றன.
தனிநபர் பயன்பாடு துவங்கி, அரசு தனியார் துறை பயன்பாடு வரை பல மென்பொருள் சேவைகளை வழங்கி வரும் மைக்ரோசாஃப்ட், ஆல்ஃபபெட் ஆகிய நிறுவனங்களுக்கு சில வியாபார கட்டுப்பாடுகளும் உண்டு. உலக நாடுகள் தங்கள் தொழில்நுட்ப சட்டங்களை புதுப்பிக்கும்போது இந்த வியாபார கட்டுப்பாடுகள் இந்த பெரு நிறுவனங்களை சிறிய அளவிலாவது பாதிக்கும். அப்படிப்பட்ட ஓர் பாதிப்பு தற்போது இந்த டெக் ஜாம்பவான் நிறுவனங்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ளது.
ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இந்த பெருநிறுவனங்கள் பல வித மென்பொருள் சேவைகளை வழங்கிவருகின்றன. இந்த நாடுகளில் சிறிய டெக் நிறுவனங்களை நசுக்குவதிலும் தொழில் போட்டியை ஏற்படுத்துவதிலும் இந்தப் பெரும் நிறுவனங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. டெக் நிறுவனம் சிறியதோ, பெரியதோ எதுவாக இருப்பினும் இவர்கள் தொழில் செய்ய ஐரோப்பிய யூனியனுக்கு ஆண்டுதோறும் வரி செலுத்த வேண்டியது அவசியம். சிறிய டெக் நிறுவனங்கள் வளர ஐரோப்பிய யூனியனில் தற்போது டிஜிட்டல் சந்தை சட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
நான்கரை கோடி பயனாளர்களுக்கு மேல் கொண்ட டெக் நிறுவனங்கள் கேட்கீப்பர் நிறுவனங்கள் என அழைக்கப்படுகின்றன. இந்த கேட்கீப்பர் நிறுவனங்கள் இனி சிறிய நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்கிற புதிய சட்டத்தை ஐரோப்பிய யூனியன் அமல்படுத்தியுள்ளது. இதனால் சிறு நிறுவனங்கள் லாபமடையும்.
ஒருவேளை பெரு நிறுவனங்கள் இந்த கட்டுப்பாட்டை மீறினால் அவர்களது ஆண்டு வருவாயில் 10 சதவீத பணத்தை அபராதமாக செலுத்த வேண்டும் என ஐரோப்பிய யூனியன் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் ஆப்பிள், மெட்டா, ஆல்ஃபபெட், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட பெருநிறுவனங்கள் கதிகலங்கிப் போயுள்ளன.