பிஸ்கெட் பாக்கெட்டில் ஒரு பிஸ்கெட் குறைவாக இருந்ததால், வாடிக்கையாளருக்கு ரூபாய் 1 இலட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த டில்லிபாபு என்பவர் கடந்த 2021-ஆம் ஆண்டு டிசம்பரில், கடை ஒன்றில் தனியார் நிறுவனத்தின் 2 பிஸ்கெட் பாக்கெட்டுகளை வாங்கியுள்ளார். அந்த பிஸ்கெட் பாக்கெட்டில் 16 பிஸ்கெட்டுகள் உள்ளன என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், உள்ளே15 பிஸ்கெட்டுகள் மட்டுமே இருந்துள்ளன.
இதுகுறித்து, டில்லிபாபு சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் முறையிட்டும் உரிய பதில் கிடைக்காததால் திருவள்ளூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
அதில், சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் நாள் ஒன்றுக்கு சுமார் 50 இலட்சம் பிஸ்கெட் பாக்கெட்டுகளை உற்பத்தி செய்கிறது. ஒரு பிஸ்கெட்டின் விலை 75 பைசா என்று கணக்கிடும் பொழுது, நாள் ஒன்றுக்குப் பொதுமக்களிடம் இந்த நிறுவனம் ரூபாய் 29 இலட்சம் அளவிற்கு மோசடி செய்கிறது என்று கூறியிருந்தார்.
இதற்கு பிஸ்கெட் நிறுவனம் தரப்பில் கூறப்பட்ட விளக்கத்தை ஏற்க மறுத்த மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம், பிஸ்கெட் கவரில் 16 பிஸ்கெட்டுகள் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் 15 மட்டுமே இருந்துள்ளது.
எனவே, நேர்மையற்ற முறையில் விற்பனை செய்ததற்காகவும், சேவை குறைபாட்டுக்காகவும் டில்லிபாபு-க்கு சம்பந்தப்பட்ட பிஸ்கெட் நிறுவனம் ரூபாய் 1 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.