சனாதனத்தை ஒழிப்போம் என்று கூறிய உதயநிதி ஸ்டாலினுக்கு, மலேசியாவிலும் கடும் எதிர்ப்புக் கிளப்பி இருக்கிறது. உதயநிதி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மலேசியாவிலுள்ள இந்திய தூதரகத்தில் 28 இந்து அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் மனு கொடுத்திருக்கிறார்கள்.
தமிழகத்தில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த, இடதுசாரி அமைப்பின் மாநாட்டில் கலந்துகொண்ட, தமிழக முதல்வர் ஸ்டாலின் மகனும், தி.மு.க. அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், சனாதனத்தை ஒழிப்போம் என்று பேசியிருந்தார். அவரது பேச்சு நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருப்பதோடு, உலகம் முழுவதிலுமுள்ள இந்துக்களின் மனதையும் புண்படுத்தி இருக்கிறது.
இதையடுத்து, உலகம் முழுவதிலுமுள்ள இந்துக்கள், இந்து அமைப்புகள் மட்டுமல்லாது, பல்வேறு தரப்பினரும் உதயநிதிக்கு கடும் கண்டத்தை பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக, மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, சனாதனம் குறித்த உண்மையின் மூலம், உதயநிதிக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், உதயநிதியின் பேச்சுக்கு மலேசிய நாட்டிலும் எதிர்ப்புக் கிளம்பி இருக்கிறது. மலேசியாவில் உள்ள 28 இந்து அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், உதயநிதியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பேட்டியளித்திருக்கின்றனர். மேலும், உதயநிதி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மலேசியாவிலுள்ள இந்திய தூதரகத்திலும் மனு கொடுத்திருக்கிறார்கள்.