சனாதன தர்மம் குறித்து, வெறுப்பு பேச்சு பேசிய திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, இறைவன் நல்ல புத்தியை கொடுக்க வேண்டும் என, பொள்ளாச்சி ஆனமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோவிலில், இந்து மக்கள் கட்சி தமிழக நிர்வாகிகள் சார்பில் மிளகாய் அரைத்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.
சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திமுக அமைச்சர் உதயநிதி சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியது கடும் கண்டனத்திற்கு உள்ளானது.
உதயநிதியின் பேச்சுக்கு பாஜக, இந்து அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. திமுகவின் கூட்டணி கட்சிகளும் உதயநிதியின் பேச்சக்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும், உதயநிதியின் பேச்சுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது.
இந்த நிலையில், அமைச்சர் உதயநிதிக்கு நல்ல புத்தி கொடுக்க வேண்டி, பொள்ளாச்சி ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோவிலில், ஹிந்து மக்கள் கட்சி தமிழகம் சார்பில், மாநில வர்த்தக அணி செயலாளர் ரவி தலைமையில், மிளகாய் அரைத்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.
அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோவிலில், எந்த ஒரு வேண்டுதல் வைத்தாலும், திருக்கோவிலில் உள்ள அம்மனுக்கு மிளகாய் அரைத்து வேண்டிக் கொண்டால், உடனடியாக அந்த வேண்டுதல் நிறைவேற்றும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இதனால்தான், மிளகாய் அரைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது என இந்து மக்கள் கட்சி தமிழக நிர்வாகிகள் தெரிவித்தனர்.