புதுடெல்லியில், ஜி20 மாநாடு 2 நாட்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதில், அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ரஷ்யா, கனடா உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இதன் மூலம் இந்தியாவின் பெருமை உலகம் முழுவதும் பரவியுள்ளது.
விழாவில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உலக தலைவர்களை மகிழ்விக்கும் வண்ணம் விருந்து அளித்தார். இதில், பாரம்பரியம் மிக்க சுவையான உணவு வகைகள் பரிமாறப்பட்டன.
அதேபோல, செவிக்கு விருந்தளிக்கும் வகையில் பல்வேறு இசை நிகழ்ச்சியும் நடைபெற்றன. இதில், மேற்கத்திய இசைக்கு பதில், பாரத நாட்டின், ஒவ்வொரு மாநில இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
ஜி20 மாநாட்டில் ஒவ்வொரு மாநிலத்தின் பாரம்பரிய இசையை ஒலிக்கச் செய்தனர். அந்த வகையில், பாரத நாட்டைச் சேர்ந்த 75 இசைக் கலைஞர்கள் விழாவுக்கு அழைக்கப்பட்டு இருந்தனர்.
இதில், அவர்கள் அந்தந்த மாநில இசைக் கருவிகளுடன் வருகை தந்தனர். அவர்கள் அனைவருக்கும், மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை இசை விருந்து படைக்கப்பட்டது.
குறிப்பாக, நாதஸ்வரம், தவில் இசையை உலக தலைவர்கள் அனைவரும் மெய்மறந்து கேட்டு ரசித்தனர். அதிலும், நமது நாதஸ்வரம், தவில் இசை அரை மணி நேரத்திற்கு மேலாக இசைக்கப்பட்டது.
திருவாரூரைச் சேர்ந்த அரசு இசைப்பள்ளி நாதஸ்வர ஆசிரியர் இளையராஜா நாதஸ்வர இசையும், சிவகங்கையைச் சேர்ந்த மணி கண்டன் வாசித்த தவிலும் உலக தலைவர்களை மட்டும் அல்லாது மாநாட்டில் பங்கேற்ற பலரையும் மெய்மறக்கச் செய்தது.
மேலும், காவடி சிந்து, பஜனை பாடல்கள், தமிழக கலாச்சார பாடல்கள், போன்றவைகளையும் இசை வடிவில் கொடுத்து, மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினர்.