கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு மகளிருக்கு இலவச பேருந்து திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வரும் நிலையில், இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெங்களூரில் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.
கர்நாடகாவில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. ஆளும் காங்கிரஸ் அரசு சார்பில், பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளும் திட்டம் தொடங்கியது.
சக்தி திட்டம் என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த திட்டத்தால் தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள், வாடகை கார்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, சக்தி திட்டத்தில் தனியார் பேருந்துகளையும் சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. ஆனால் அவற்றில் சில கோரிக்கைகளை ஏற்க போக்குவரத்து துறை மறுத்து விட்டது.
இதையடுத்து, சக்தி திட்டத்திற்கு எதிராக பெங்களூருவில் தனியார் பேருந்துகள் உள்ளிட்ட வாகன ஓட்டுநர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன.
இதனால், வாரத்தின் முதல் நாளான நேற்று, (திங்கள் கிழமை) மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால், அலுவலகம் செல்வோர், பள்ளி, கல்லூரி செல்வோர், வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளானார்கள்.