உலக அளவில் பெரிய நிறுவனங்களை வழிநடத்துவதிலும், உரிமையாளர்களாக இருப்பதிலும் இந்தியர்கள் கொடிகட்டி பறக்கிறார்கள்.
அந்த வகையில், ஐபிஎம் நிறுவனத்தின் சிஇஓ அரவிந்த் கிருஷ்ணா குறித்து பார்ப்போம்,
அரவிந்த் கிருஷ்ணா 1962-ஆம் ஆண்டு ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பிறந்தார். இவரது தந்தை வினோத் கிருஷ்ணா இந்திய இராணுவத்தில் பணியாற்றியவர். தாயார், ஆரத்தி கிருஷ்ணா, இராணுவ விதவைகளின் நலனுக்காக பணியாற்றியவர்.
தமிழ்நாட்டின் குன்னூர் ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்திய மேல்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த அரவிந்த் கிருஷ்ணா, 1985-ஆம் ஆண்டு கான்பூரில் உள்ள இந்திய தொழில் நுட்பக் கழகத்தில் மின்பொறியியல் துறையில் இளங்கலைப் பட்டமும், 1990-ஆம் ஆண்டு அமெரிக்காவில் மின்பொறியியலில் முனைவர் பட்டமும் பெற்றார்.
பின்னர், ஐபிஎம்-மில் தாமஸ் ஜே. வாட்சன் ஆராய்ச்சி மையத்தில் சேர்ந்த கிருஷ்ணா, தனது கடினமான உழைப்பால், ஐபிஎம்மின் கிளவுட் மற்றும் அறிவாற்றல் மென்பொருள் பிரிவின் மூத்த துணைத் தலைவைரானார். தொடர்ந்து, செயற்கை நுண்ணறிவு, கிளவுட், குவாண்டம் கம்ப்யூட்டிங் மற்றும் பிளாக்செயின் ஆகியவற்றில் ஐபிஎம் நிறுவனத்திற்கான புதிய சந்தைகளை உருவாக்குவதற்கும், விரிவாக்குவதற்கும் இவர் தலைமை தாங்கினார்.
இவ்வாறு, படிபடியாக உயர்ந்த கிருஷ்ணா, 2020-ஆம் ஆண்டு ஐபிஎம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.