நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் வரும் 18-ம் தேதி தொடங்கும் நிலையில், அத்தொடருக்கான நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டிருக்கிறது. இத்தொடரில், தேர்தல் ஆணைய அதிகாரிகள் தேர்வு உட்பட 4 மசோதாக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த ஜூலை மாதம் 20-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி நிறைவடைந்தது. ஆனால், இக்கூட்டத் தொடரில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு, அவையை முடக்கியதால், கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்க முடியவில்லை. மேலும், பல்வேறு மசோதாக்களையும் நிறைவேற்ற முடியவில்லை. எனவே, நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடரைக் கூட்டி, முக்கிய விஷயங்கள் குறித்து விவாதங்கள் நடத்தவும், மசோதாக்களை நிறைவேற்றவும் மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, செப்டம்பர் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்தது.
இதனிடையே, “ஒரே நாடு ஒரே தேர்தல்” சாத்தியமா என்பது குறித்து ஆராய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான ஒரு குழுவை மத்திய அரசு அமைத்தது. அதேபோல, ஜி20 மாநாட்டில் கலந்துகொண்ட தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அளித்த விருந்து தொடர்பான அழைப்பிதழிலும், பிரதமர் நரேந்திர மோடியின் இந்தோனேஷிய பயணம் குறித்து அறிவிப்பிலும், இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என்று அச்சிடப்பட்டிருந்தது. இதையடுத்து, செப்டம்பர் 18-ம் தேதி கூடவிருக்கும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில், ஒரே நாடு ஒரே தேர்தல் மற்றும் இந்தியாவுக்கு பதில் பாரத் என பெயர் மாற்றும் மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்கட்சிகள் வதந்திகளை கிளப்பி வந்தன.
இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடருக்கான நிகழ்ச்சி நிரலை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. அதன்படி, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரின் முதல் நாளான 18-ம் தேதி வழக்கமான அலுவல் தவிர, கடந்த 75 ஆண்டுகால நாடாளுமன்ற பயணம் குறித்த விவாதம் நடைபெறும். மேலும், “75 ஆண்டுகளில் நாடாளுமன்றப் பயணம்” என்கிற தலைப்பின் கீழ், சாதனைகள், அனுபவங்கள், நினைவுகள் மற்றும் கற்றல்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இது தவிர, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில், இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் நியமன மசோதா, வழக்கறிஞர்கள் திருத்த மசோதா, தபால் அலுவலக மசோதா, பத்திரிகை மற்றும் பத்திரிகை பதிவு மசோதா ஆகிய 4 மசோதாக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது ஒருபுறம் இருக்க, இந்த சிறப்புக் கூட்டத் தொடரின் முதல் நாள் கூட்டம் மட்டுமே நாடாளுமன்ற பழையக் கட்டடத்தில் நடைபெறும். 19-ம் தேதி முதல் புதிய நாடாளுமன்றக் கட்டத்தில் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், பழைய நாடாளுமன்றக் கட்டடத்துக்கு பிரியாவிடை கொடுக்கப்படுகிறது.