திமுக சேர்ந்திருக்கும் I.N.D.I. கூட்டணியானது பதவிக்காக மட்டுமே அமைந்த கூட்டணி எனத் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
”என் மண் என் மக்கள்” பயணம், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாவது படைவீடான திருவாவினன்குடி குழந்தை வேலாயுதன் அருள்பாலிக்கும் பழனி திருத்தலத்தில், பெரும் மக்கள் திரள் நடுவே, மிகச் சிறப்பாக நேற்று நடந்தேறியது.
அமெரிக்காவில் உள்ள நிறுவனம் ஒன்று, உலகம் முழுவதும் நடத்தும் ஆய்வில், நான்கு வருடங்களாக தொடர்ந்து நரேந்திர மோடி அவர்கள் சிறந்த தலைவராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ஆனால், இங்கிருக்கும் சிலர், அவரைப் பற்றித் தவறாகப் பேசுகிறார்கள்.
வரும் பாராளுமன்ற தேர்தல் மிக… pic.twitter.com/0oHouI2EaS
— K.Annamalai (@annamalai_k) September 16, 2023
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் முதல் ஐந்தாண்டு கால ஆட்சி, கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத் தவறுகளைச் சரி செய்வதாக அமைந்தது. இரண்டாவது ஐந்தாண்டு கால ஆட்சி, ஏழை எளிய மக்களை மையப்படுத்தி, வளர்ச்சிக்கான ஆட்சியாக அமைந்திருக்கிறது.
உலகப் பொருளாதார வரிசையில் பதினொன்றாவது இடத்தில் இருந்த நமது நாடு, தற்போது ஐந்தாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. நமது பாரதப் பிரதமர் மோடி அவர்களின் ஒன்பதாண்டு கால ஆட்சியில், 42 கோடி வங்கி கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
55 கோடி குடும்பங்களுக்கு கழிப்பறை வசதி கிடைத்திருக்கிறது. தனிமனித சராசரி வருமானம் 80,000 ல் இருந்து 1,96,000 ஆக உயர்ந்துள்ளது. நமது அடுத்த ஐந்து ஆண்டு கால ஆட்சி, நமது குழந்தைகளின் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் ஆட்சியாக அமையும். பொருளாதாரத்தில், உலகில் மூன்றாவது இடத்தைப் பிடிக்கும்.
திமுகவை உருவாக்கிய அறிஞர் அண்ணாதுரையின் குடும்பத்தில் யாரும் அரசியலுக்கு வரவில்லை. ஆனால், அவரைத் தவிர திமுகவில் இருக்கும் அத்தனை பேருமே தங்கள் வாரிசுகளை அரசியலுக்குக் கொண்டு வந்து பதவி வாங்கிக் கொடுத்து விட்டார்கள். ஊழல் செய்து கொழுத்த பணத்தில் இருப்பவர்களுக்கு, ஏழை மக்களின் வருத்தம் எப்படித் தெரியும்?
தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், வாரிசு கோட்டாவில் பதவிக்கு வந்தவர். அவரது தந்தையின் பெயர் இனிஷியலை வைத்துக் கொண்டு, ஐபிஎஸ் என்று பட்டப்பெயர் வைத்துக் கொண்டு சுற்றி வருகிறார். தொகுதிக்கு வருவதே இல்லை. பின் எப்படி தொகுதி மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்? திமுகவினர் சம்பாதிக்க மட்டுமே ஆட்சி நடத்துகிறார்கள்.
திமுக ஆட்சியில், துப்புரவுப் பணி செய்பவர்களுக்கு, 550 ரூபாய் சம்பளம் கொடுக்க வேண்டிய இடத்தில் 250 ரூபாய் கொடுக்கிறார்கள். 12 மணி நேரம் வேலை வாங்கி விட்டு, அதற்கான ஊதியத்தைக் கொடுக்காமல் வஞ்சிப்பது என்ன நியாயம். ஏழைகளின் கஷ்டம், வாரிசு அரசியல்வாதியான தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமாருக்குத் தெரிய வாய்ப்பில்லை.
பழனி முருகர் கோயிலில் 200 கோடி ரூபாய் வருமானம் வருகிறது. கோவிலுக்கு 1500 கோடி ரூபாய்க்கு சொத்து இருக்கிறது. ஆனால் கோவில் கோசாலையில் இருக்கும் 17 பசுக்கள் உணவு இல்லாமல் இறந்ததாக மருத்துவர் கூறியிருக்கிறார்.
திமுகவினருக்கு 200 க்கும் மேற்பட்ட பசுக்களைக் கொடுத்திருக்கிறார்கள். கோவில் சொத்துக்களை வைத்து, கோவில் திருப்பணிகள் செய்யாமல் கொள்ளை அடிக்கிறார்கள். கடவுள் விஷயத்திலும் கமிஷன் அடிக்கிறார்கள். அறநிலையத்துறை கோயில்கள் மூலம் வெறும் 200 கோடி ரூபாய் தான் வருமானம் காட்டுகிறார்கள். கோவில் சொத்துக்களை ஒழுங்காகப் பராமரித்தால் 5000 கோடி வர வேண்டும். அந்தப் பணத்தை வைத்து, மக்கள் நலப் பணிகள் எத்தனையோ செய்ய முடியும். ஆனால் திமுக செய்யாது. அரசியலில் இருந்தே ஒதுக்கப்பட வேண்டிய கட்சி திமுக.
தமிழக பாஜகவினர் வைக்கும் போஸ்டர்களை, காவல்துறையினர் முன்னிலையில் திமுகவினர் கிழிக்கிறார்கள். பாஜகவின் தொண்டர்கள் தங்கள் நேர்மையான உழைப்பால் வைக்கும் போஸ்டர்கள் அவை.
திமுகவைப் போல கமிஷன் பணத்தில் வைப்பது அல்ல. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பாஜக மீது 181 தவறான வழக்குகள் போட்டிருக்கிறார்கள். காவல்துறை அதிகாரிகள் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். ஆளுங்கட்சிகள் மாறலாம். ஆனால், காவல்துறையின் கண்ணியம் குறையக் கூடாது. நேர்மையான காவல்துறையினருக்கு, தர்மம் நிச்சயம் அனைத்து நலன்களையும் கொடுக்கும்.
பழனி கோவில் திருப்பணிகளில் ஈடுபடும் மிராஸ் பண்டாரங்களை அற நிலையத் துறை இணை ஆணையர் தரக்குறைவாகப் பேசுகிறார். கோவிலுக்குச் சொந்தமான 220 ஏக்கர் நிலத்தை அபகரித்துள்ளார்கள். அது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் உள்ளது. கோவில் வருமானம் மட்டும் வேண்டும் ஆனால் கோவிலுக்கான பணிகளைச் செய்ய மாட்டார்கள். இதனால்தான் அறநிலையத் துறை வேண்டாம் என்கிறோம்.
திமுக சேர்ந்திருக்கும் I.N.D.I. கூட்டணியானது பதவிக்காக மட்டுமே அமைந்த கூட்டணி. நாட்டு மக்கள் மீது எந்த அக்கறையும் அவர்களுக்குக் கிடையாது. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் பதவி வேண்டும் என்பதற்காகவே, காங்கிரஸில் இருந்து பிரிந்து போன கட்சிகள் எல்லாம் காங்கிரஸுடன் சேர்ந்து நாட்டை விற்பதற்காக உருவாகிய கூட்டணி. அவர்களை மக்கள் முழுமையாகப் புறக்கணிப்பார்கள்.
1980 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பயணத்தைத் தொடங்கிய பாரதிய ஜனதா கட்சி, இன்று இரண்டு முறை தொடர்ந்து பெரும்பான்மை பெற்று ஆட்சியில் இருக்கிறதென்றால், நமது கட்சியினரின் தொடர் உழைப்பே காரணம்.
தமிழகத்திலும், பாஜக முன்னேறி வருகிறது. அமெரிக்காவில் உள்ள நிறுவனம் ஒன்று, உலகம் முழுவதும் நடத்தும் ஆய்வில், நான்கு வருடங்களாக தொடர்ந்து நரேந்திர மோடி சிறந்த தலைவராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ஆனால், இங்கிருக்கும் சிலர், அவரைப் பற்றித் தவறாகப் பேசுகிறார்கள்.
வரும் பாராளுமன்ற தேர்தல் மிக முக்கியமான தேர்தல். ஊழல் கட்சிகளுக்கும் மோடி அவர்களின் நேர்மைக்கும் இடையேயான தேர்தல். நமது பிரதமரின் அமைச்சரவையில், ஒரு அமைச்சர் மீது கூட ஊழல் குற்றச்சாட்டு வைக்க முடியாது. அனைவரும் நேர்மையானவர்கள்.
இன்னும் குறைந்தது 15 ஆண்டுகள், நமது பிரதமர் மோடியின் பணிகள் நம் நாட்டிற்குத் தேவை. வரும் பாராளுமன்ற தேர்தலோடு, சட்டசபைக்கும் தேர்தல் வருமா என்பது தெரியாது. ஆனால், இனி ஒரு தேர்தல் நடந்தாலும், ஒரே நேரத்தில் இரண்டு தேர்தல் நடந்தாலும் மக்களின் கைகள் நேர்மையை நோக்கித் தான் செல்ல வேண்டும். வரும் பாராளுமன்றத் தேர்தலில், தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் பாஜக கூட்டணிக்கு வாக்களித்து, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்கத் துணை நிற்க வேண்டும், எனத் தெரிவித்துள்ளார்.