பணி நிரந்தரம் மற்றும் மே மாத ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் தொடங்க உள்ளனர்.
இது குறித்து, ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பழ.கௌதமன் கூறுகையில், கடந்த 2012 -ம் ஆண்டு முதல் அரசுப் பள்ளிகளில் மிகக் குறைந்த ஊதியத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறோம். எங்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி வருகிறோம். ஆனால், எங்கள் கோரிக்கை நிறைவேற்றவில்லை.
கடந்த சட்ட மன்ற தேர்தலின் போது, திமுக தனது தேர்தல் அறிக்கையில் வரிசை எண் 181 -ல் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வோம் எனக் கூறியிருந்தனர். ஆனால், 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் பணி நிரந்தரம் செய்யவில்லை.
3 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய அதே ஊதியத்தையே, தற்போதும் வாங்கி வருகிறோம். கடந்த 12 ஆண்டுகளாக எங்களுக்கு மே மாத சம்பளமும் வழங்கவில்லை.
இதற்காக, கடந்த மே மாதம் போராட்டம் நடத்தியபோது, மே பணி நிரந்தரம் செய்யத் தாமதம் ஆனால், ஊதியத்தை உயர்த்தி அனைத்து வேலை நாட்களும் முழுநேர வேலை கொடுக்கின்றோம் என உறுதிமொழி கொடுத்தனர். அதையும் நிறைவேற்றவில்லை.
எனவே, தேர்தல் அறிக்கை 181 -ஐ உடனே நிறைவேற்றக் கோரி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், வரும் 25 -ம் தேதி திங்கள் கிழமை முதல் சென்னை, நுங்கம்பாக்கம், பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளோம். யார் தடுத்தாலும் போராட்டம் நிற்காது. எவ்வளவு தடைகள் வந்தாலும் போராட்டம் நடைபெறும் என்றார்.