மெல்போர்ன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துபோன டாஸ்மேனியன் புலி இன விலங்கை மீண்டும் உயிர்ப்பிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
தைலசின் என்று அழைக்கப்படும் டாஸ்மேனியன் புலி இனம் கடந்த 2000 ஆண்டுகளுக்கு முன்பு காலநிலை மாற்றம், வேட்டையாடுதல் உள்ளிட்ட காரணங்களால் ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா தீவைத் தவிர உலகின் மற்ற பகுதிகளில் இருந்து அழிந்து போனது. உடலில் புலியைப் போல வரிகளைக் கொண்டதால் அதற்கு டாஸ்மேனியன் புலி என்று பெயரிடப்பட்டது. மாறாக அது பார்ப்பதற்கு ஓநாயின் தோற்றத்தை கொண்டிருந்தது.
ஐரோப்பிய குடியேற்றத்திற்கு முன்பு சுமார் 5,000 டாஸ்மேனிய புலிகள் டாஸ்மேனிய காடுகளில் இருந்ததாக கூறப்படும் நிலையில், பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கால்நடைகளுக்கு அச்சுறுத்தலாக கருதி, அவை தொடர்ந்து வேட்டையாடப்பட்டன. உலகின் கடைசி டாஸ்மேனியன் புலி, டாஸ்மேனியாவில் உள்ள ஹோபர்ட் விலங்கியல் பூங்காவில் 1936-ஆம் ஆண்டு இறந்தது. அந்த புலியின் பெயர் பெஞ்சமின்.
அதன் பிறகு நீண்டகாலமாக டாஸ்மேனியன் புலி இனத்தை மீண்டும் உயிர்ப்பிக்கும் முயற்சியில் ஆய்வாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது பண்டைய டிஎன்ஏ மீட்டெடுப்பு மற்றும் செயற்கை இனப்பெருக்கம் ஆகியவற்றின் முன்னேற்றங்களைப் பயன்படுத்தி அழிந்துபோன இந்த விலங்கை மீண்டும் கொண்டு வர மெல்போர்ன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் முயற்சி செய்து வருகின்றனர். மாமிச உண்ணிகளை உயிர்ப்பிக்க உதவும் ஆர்என்ஏ மாதிரியை மீட்டெடுத்ததால், டாஸ்மேனிய புலியை மீண்டும் பூமியில் நடமாடச் செய்ய முடியும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
ரிபோநியூக்ளிக் அமிலம் (ஆர்என்ஏ) என்பது அனைத்து உயிரணுக்களிலும் உள்ள ஒரு மரபியல் பொருளாகும். இது டிஎன்ஏக்கு நிகரான கட்டமைப்பு ஒற்றுமைகளைக் கொண்டது. ஸ்வீடனில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் 1891-ஆம் ஆண்டு முதல் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு டாஸ்மேனியன் புலியின் உடலிலிருந்து இந்த ஆர்என்ஏவை ஆய்வாளர்கள் மீட்டெடுத்துள்ளனர்.
இந்த ஆய்வு , அமெரிக்காவின் கொலோசல் பயோசயின்சஸ் நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படுகிறது. மேலும் இத்திட்டத்துக்காக 15 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிடப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.