இந்திய வீராங்கனை அன்திம் பன்ஹால் 16-6 என்ற புள்ளி கணக்கில் ஸ்வீடன் வீராங்கனையை வீழ்த்தினார்.
செர்பியா தலைநகர் பெல்கிரேடில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று பெண்களுக்கான பிரீஸ்டைல் 53 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டி நடந்தது.
இதில், 19 வயது இந்திய வீராங்கனை அன்திம் பன்ஹால், ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த எம்மா ஜோனா டெனிஸ் மால்ம்கிரினை எதிர்கொண்டார்.
20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக சாம்பியன்ஷிப்பில் 2 முறை சாம்பியன் பட்டம் வென்றவரான அரியானாவைச் சேர்ந்த அன்திம் தொடக்கம் முதல் சிறப்பாக ஆடினார்.
இறுதியில், இந்தியாவின் அன்திம் பன்ஹா 16-6 என்ற புள்ளி கணக்கில் ஐரோப்பிய சாம்பியனான எம்மா ஜோனாவை வீழ்த்தி வெண்கலப்பதக்கத்தை வென்றார்.
இதன் மூலம் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற 6-வது இந்திய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார்.மேலும், பாரிசில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு அன்திம் பன்ஹால் தகுதி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.