டெல்லியில் வரும் திங்கள் கிழமையன்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, முதல் பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் செல் பேருந்தை (Green Hydrogen Fuel Cell Bus) கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்.
தில்லி, ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட வழித்தடங்களில் பசுமை ஹைட்ரஜனால் இயக்கப்படும் 15 எரிபொருள் செல் பேருந்துகளை இயக்கி சோதனை மேற்கொள்வதற்கான திட்டத்தை இந்தியன் ஆயில் நிறுவனம் தொடங்கியுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், முதல் கட்டமாக 2 எரிபொருள் செல் பேருந்துகள் 25.09.2023 (திங்கட்கிழமை) அன்று இந்தியா கேட்டில் இருந்து இயக்கப்படவுள்ளன. இந்தியாவின் இந்த முதல் முயற்சியில் எரிபொருள் செல் பேருந்துகளுக்கு 350 பார் என்ற ஆற்றல் அடர்த்தியில் பசுமை ஹைட்ரஜன் விநியோகிக்கப்பட உள்ளது.
சோலார் பி.வி பேனல்களைப் பயன்படுத்தி மின்னாற்பகுப்பிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பசுமை ஹைட்ரஜனுக்கு எரிபொருள் நிரப்பக்கூடிய அதிநவீன விநியோக வசதி இந்தியன் ஆயில் நிறுவனத்தின், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமான ஃபரிதாபாத் வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது.
2 பேருந்துகளும் அறிமுகப்படுத்தப்பட்டவுடன், இந்தப் புதிய தொழில்நுட்பத்தின் செயல்திறன் மற்றும் ஆயுட்காலம் குறித்த நீண்ட கால மதிப்பீட்டிற்காக அனைத்து பேருந்துகளிலும் 3 லட்சம் கிலோமீட்டருக்கும் அதிகமான பயண தூரம் மதிப்பீடு செய்யப்படும்.
இந்தக் கடுமையான சோதனைகள் மூலம் உருவாக்கப்படும் தரவுகள் பசுமை ஹைட்ரஜனால் இயக்கப்படும் நாட்டில் பூஜ்ஜிய உமிழ்வு இயக்கத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கும் ஒரு தேசிய களஞ்சியமாக செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.