அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலாகச் சீனா மாறி உள்ளதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார்.
குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி பதவிக்கான போட்டியில் உள்ள நிக்கி ஹாலே கூறியதாவது, கடந்த அரை நூற்றாண்டாக அமெரிக்காவைத் தோற்கடிப்பதற்காகச் சீனா சதி செய்து வருகிறது. சில விஷயங்களில் சீன இராணுவம் ஏற்கெனவே, அமெரிக்க இராணுவத்துக்கு இணையாக மாறி உள்ளது. அந்நாட்டை எதிர்கொள்ள வலிமை முக்கியம். சீனா நமது வர்த்தக இரகசியங்களை எடுத்துக் கொண்டுள்ளது.
இப்போது, சீனா மருத்துவத்துறை முதல் அதிநவீன தொழில்நுட்பம் வரை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முயல்கிறது. பின் தங்கிய நாடாக இருந்த சீனா தற்போது, உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக மாறி உள்ளது. மேலும், காம்யூனிஸ்ட் கட்சியின் உள்நோக்கம் தெளிவாகத் தெரிகிறது. சீனா தனது உளவு பலூன்களை எங்கள் நாட்டிற்கு அனுப்புகிறது.
சீனா அமெரிக்காவை அச்சுறுத்தவும், ஆசியாவைத் தாண்டி ஆதிக்கம் செலுத்தும் வகையில் தனது இராணுவத்தைக் கட்டமைத்து வருகிறது. அமெரிக்க இராணுவத்திற்கு இணையாகத் தனது இராணுவத்தை அந்நாடு மேம்படுத்தி உள்ளது.
சீனா போருக்குத் தயாராகி வருகிறது. வெற்றியை அந்நாட்டுத் தலைவர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் என்று நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார்.