குஜராத்தில் இந்த மாத இறுதி வரை சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தின் பல பகுதிகளில் இன்று கனமழை பெய்தது. உனாவில் அதிகபட்சமாக 41 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. பிலாஸ்பூரின் ஜந்துடாவில் 20 மில்லி மீட்டர் மழையும், கசௌலி மற்றும் டெஹ்ராவில் 5 மில்லி மீட்டர் மழையும், பார்தியில் 4 மில்லி மீட்டர் மழையும் மற்ற பகுதிகளிலும் லேசான மழையும் பெய்துள்ளது.
இன்று காலை சோலன், உனா, ஹமிர்பூர் மற்றும் பிலாஸ்பூர் மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும், சிம்லா, காங்க்ரா, மண்டி மற்றும் சிர்மவுர் ஆகிய மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கையும் விடப்பட்டது.
இமாச்சலப்பிரதேசத்தில் சில பகுதிகளில் நாளை லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், நாளை மறுநாள் முதல் 5 நாட்களுக்கு வானிலை தெளிவாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேபோல், குஜராத்தில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. கனமழையின் காரணமாக, குஜராத்தின் சில பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.
இந்நிலையில், குஜராத்தில் செப்டம்பர் 23-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை லேசானது முதல் மிதமானது வரை பெய்யக்கூடும் என்றும் குஜராத்தின் சில பகுதிகளில் இந்த மாத இறுதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.