தமிழகம் முழுவதும் தேச ஒற்றுமையை வலியுறுத்தி, பொது இடங்களில் சுமார் 1.5 லட்சம் சிலைகளும், தலைநகர் சென்னையில் மட்டும் 8,000 சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த சிலைகள் தற்போது நீர் நிலைகளில் கரைக்கப்பட்டுள்ளன.
விநாயகப் பெருமானை வணங்கினால் தடைகள் நீங்கி, வெற்றி, ஞானம் கிடைக்கும். ஹிந்துக்களின் பாரம்பரியம் மிக்க கலாச்சார பண்டிகையாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. தேச ஒற்றுமையை வலியுறுத்தி விநாயகர் சதுர்த்தி வழிபாடு நடத்திய பெருமை பாலகங்காத திலகரைச் சாரும்.
மும்பையில் தொடங்கிய இந்த பெருமை, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் எதிரொலித்தது. தமிழகத்தில் முதன்முதலில் சென்னை திருவல்லிக்கேணியில், இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை வைக்கப்பட்டது. தற்போது, தமிழகம் முழுவதும் ஒன்னறை லட்சம் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது.
இப்படிச் சிறப்பு வாய்ந்த, விநாயகர் சதுர்த்தி விழா, தமிழகத்தில், கடந்த 18 -ம் தேதி முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. திரும்பிய திசை எங்கும், பட்டி தொட்டி எங்கும், ஒவ்வொரு தெருவிலும் விநாயகர் சிலை வைத்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.
எல்லாக் கடவுள்களுக்கும் ஆகமவிதி உள்ளது. ஆனால், விநாயகருக்கு மட்டும் ஆகமவிதி இல்லை. சாணத்திலும் பிடித்துவைக்கலாம், மஞ்சளிலும் பிடித்து வைக்கலாம், அரிசி மாவிலும் பிடித்துவைக்கலாம். இதனால்தான், பொது மக்களிடம் பிள்ளையார் “செல்லப்பிள்ளை” ஆனார்.
குறிப்பாக, இந்த வருடம் சந்திரயான் -3 விநாயகர், செங்கோல் விநாயகர், ஊஞ்சல் விநாயகர், சக்தி விநாயகர், சங்கரஹர விநாயகர், சிங்க விநாயகர், அய்யனார் விநாயகர், சிவன் விநாயகர், பெருமாள் விநாயகர் எனப் பல வடிவங்களில் பக்தர்களுக்குக் காட்சி கொடுத்தார்.
இப்படி பல்வேறு வடிவங்களில் அருள்பாலித்து வந்த விநாயகர் சிலைகளை, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு இல்லாத வகையில் தயார் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
பின்னர், விநாயகருக்குச் சிறப்பு அலங்காரம், பூஜை செய்தும், கொழுக்கட்டை, அவல், பொறி, பழங்கள் வைத்தும் பக்தர்கள் வணங்கி மகிழ்ந்தனர்.
கடைசி நாளான இன்று சென்னையில் இன்று பட்டினப்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு உள்ளிட்ட 4 இடங்களில் விநாயகர் சிலைகள் கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக, 17 வழித்தடங்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வழிநெடுகிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
சிசிடிவி கேமராக்கள் இல்லாத இடங்களில் நடமாடும் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது. சென்னை கடற்கரையில், விநாயகர் சிலைகளைக் கடலில் கரைக்க வசதியாக, மணற்பரப்பில் ட்ரேலி அமைத்து, கடற்கரை கொண்டு செல்ல எளிதாக்கப்பட்டது.
பின்னர், ராட்சத கிரேன் கொண்டு, விநாயகர் சிலையைப் பத்திரமாக அப்படியே தூக்கி கடலுக்குக் கொண்டு சென்ற காட்சி கண்களை விட்டு அகலாமல் அப்படியே நிற்கிறது.
அதுமட்டுமல்ல, கடலில் சிலை கரைக்கும் போது யாராவது தவறி விழுந்துவிட்டாலும், அவர்களைக் காப்பாற்ற அடையாளம் காணும் வகையில், ட்ரேன் சுற்றிச் சுற்றி வந்தது. மேலும், அதே ட்ரேனில் கடலில் விழுந்தவர்களைப் பாதுகாக்கும் ஜாக்கெட்டும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.
விநாயகர் சிலையைக் கடலில் கரைக்க, அட்டோ, லாரி என பல்வேறு வாகனங்களில் கொண்டு சென்றனர். அப்போது, மேளம், தாளம் முழுங்க இளசுகள் போட்ட ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்தின் சிகரமாகக் காட்சி தந்தது. அசம்பாவிதங்களை தடுக்க சென்னையில் மட்டுமே 22,000 காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
இதேபோல, விழுப்புரம், வேலூர், கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், திருச்சி, கரூர், பெரம்பலூர், தஞ்சை, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி எனத் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நகரம் மற்றும் கிராமங்களிலும் விநாயகர் சிலை வைத்து சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.
இந்த சிலைகள் அருகில் உள்ள ஆறுகளிலும், ஆறுகள் இல்லாத ஊர்களில் ஏரி, குளம்,.கிணறு உள்ளிட்ட நீர்நிலைகளில் பாதுகாப்பாகக் கரைக்கப்பட்டது.