அதிமுக முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை புதுக்கோட்டை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை அக்டோபர் 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீது ஊழல் தடுப்பு இயக்குநரகம் சொத்துக்குவிப்பு வழக்குப் பதிவு செய்துள்ளது.
கடந்த 2016 -ம் ஆண்டு முதல் 2021 -ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சியில், வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக, அதிமுக முன்னாள் அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் மீது, தமிழக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இதையடுத்து, விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா மற்றும் உறவினர்கள், நண்பர்களின் அலுவலகங்கள், வீடுகள், கல்குவாரி உள்பட 50 -க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். இதில், முக்கியத் சொத்து ஆவணங்கள், ரொக்கப் பணம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. மேலும், இது தொடர்பாக, புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளனர்.
இதில், அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், ரூ.39.79 கோடி வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளதாக குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையலில், அதிமுக முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை புதுக்கோட்டை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, டாக்டர் விஜயபாஸ்கர் மீதான வழக்கு விசாரணையை அக்டோபர் 7-க்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.