காவிரி நதி நீர் பங்கீடு செய்வது தொடர்பாகக் கர்நாடகா – தமிழ்நாடு இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. தமிழகத்திற்குத் தினமும் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் 15 நாட்களுக்குத் தண்ணீர் திறக்க வேண்டும் எனக் கர்நாடக அரசுக்குக் காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த 18 -ம் தேதி உத்தரவிட்டது. இதற்குக் கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
வாட்டாள் நாகராஜ் தலைமையிலான அமைப்பு கன்னட ஒக்குடா என்ற பெயரில் 29-ம் தேதியான இன்று மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளது.
இந்த முழு அடைப்பு போராட்டம் இன்று காலை 6 மணிக்குத் தொடங்கியது. இன்று மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இதனால், பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முழு அடைப்பையொட்டி, பெங்களூருவில் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பேருந்து ஆட்டோ, கார், டாக்சி உள்ளிட்டவை ஓடவில்லை. திரையரங்குகள், கடைகள், வணிக வளாகங்கள், பெட்ரோல் பங்க் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி, பல்வேறு பகுதிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த போராட்டத்திற்கு, பா.ஜ.க மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஜேடி (எஸ்) மற்றும் ஆம் ஆத்மி கட்சி மற்றும் பெங்களூரு நவநிர்மாணா கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.