கேரளாவில் இடைவிடாது, பெய்து வரும் கனமழையின் காரணமாக, பத்து மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கேரளாவில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக, பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கி பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால், வாகனங்கள் மெதுவாக சென்றன. மேலும், தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் சூழ்ந்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அரபிக்கடல் கொங்கன்-கோவா கடற்கரை மற்றும் வடகிழக்கு வங்கக்கடல் பகுதியில் 2 குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக, அடுத்த இரண்டு நாட்களுக்குக் கனமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால், ஆலப்புழா, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆலப்புழா, இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு மற்றும் வயநாடு ஆகிய 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கேரளாவில் மழை தொடர்ந்து பெய்து வருவதால், மலைப் பகுதிகள், கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய ஆலப்புழாவின் குட்டநாடு பகுதியில் 3 நடமாடும் மிதக்கும் மருந்தகங்கள் மற்றும் நீர் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் உள்ளது.