கிளாஸ்கவ் குருத்வாராவில் நடந்த நிகழ்வுக்காக, இந்தியத் தூதரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். அதற்கு அவர் தகுதியானவர். அதேபோல, காலிஸ்தான் தீவிரவாதிகளை கட்டுப்படுத்துவது மிகவும் அவசியமான ஒன்றாகும் என்று இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனின் ஆலோசகர் காலின் ப்ளூம் கூறியிருக்கிறார்.
இங்கிலாந்து நாட்டுக்கான இந்தியத் தூதர் விக்ரம் துரைசாமி, ஸ்காட்லாந்தின் கிளாஸ்கவ்வில் உள்ள சீக்கிய குருத்வாரா நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக நேற்று சென்றார். இதையறிந்த, காலிஸ்தான் தீவிரவாதிகள், இந்தியத் தூதரை குருத்வாராவுக்குள் நுழைய விடாமல் தடுத்து திருப்பி அனுப்பி விட்டனர். இந்த சம்பவம் கடும் அதிர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனின் ஆலோசகர் காலின் ப்ளூம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இந்தியத் தூதர் வருகையை முன்னிட்டு, கிளாஸ்கவ்வில் உள்ள குருத்வாரா வளாகத்தில், அவருக்கு வரவேற்பு அளிப்பதற்காக ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அங்கு வந்த காலிஸ்தான் தீவிரவாதிகள், இந்திய அதிகாரியை உள்ளே நுழைய விடாமல் திருப்பி அனுப்பி இருக்கின்றனர். கிளாஸ்கவ் குருத்வாராவில் நடந்த இச்சம்பவத்தைக் கண்டு நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.
காலிஸ்தான் தீவிரவாதிகள் என்னதான் செய்ய நினைக்கிறார்கள்? இன்னும் எனனவெல்லாம் செய்ய நினைக்கிறார்கள் என்பது தெரியவில்லை. ஒரு பொது இடத்தில் தங்களால் பொதுமக்களை மிரட்டவும், துன்புறுத்தவும் முடியும் என்று நினைக்கிறார்கள். இது முற்றிலும் தவறானது. இதை இப்படியே வளர விடக் கூடாது. அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இங்கிலாந்து அரசை நான் வலியுறுத்துகிறேன். மேலும், இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இந்தியத் தூதரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். அதற்கு அவர் தகுதியானவர்.
சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த பெரும்பான்மையான மக்கள் அமைதியான மக்கள். தீவிரவாத சித்தாந்தத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை. அதேசமயம், சீக்கிய சமூகத்திற்குள் இருக்கும் ஒரு சிறிய பிரிவினர் தீவிரவாத அல்லது மிகவும் ஆக்ரோஷமான மற்றும் போர்க்குணமிக்க போக்குகளைக் கொண்டுள்ளனர். பெரும்பான்மையான பிரிட்டிஷ் சீக்கியர்கள் தங்கள் வாழ்க்கையை இடையூறு இல்லாமல் நடத்த விரும்புகிறார்கள். ஆனால், இதுபோன்ற தீவிரவாதிகளின் அசிங்கமான செயலால் பதற்றமடைந்து பயமுறுத்தப்படுகிறார்கள்.
எனவே, இராஜதந்திர பாதுகாப்புக் குழுக்கள் எதிர்காலத்தில் இந்தியத் தூதரகம் மற்றும் தூதரக அதிகாரிகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். சமீபத்தில், இந்தியத் தூதரகத்தில் காலிஸ்தான் தீவிரவாதிகள் ஏறி, இந்தியக் கொடியை இறக்கிய மிகவும் கவலைக்குரிய சம்பவம் அரங்கேறியது வருந்தத்தக்கது. ஆகவே, பிரிட்டிஷ் மக்களுக்கு நான் ஒன்ரைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்காது என்பதை நாம் உறுதி செய்ய வேண்டியது கட்டாயமாகும்.
நாம் அதைச் செய்யாவிட்டால், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதற்கு தீவிரவாதிகள் மீண்டும் முயற்சிப்பார்கள். சில காலிஸ்தான் சார்பு சீக்கியக் குழுக்கள், மனித உரிமைச் செயல்பாடு என்கிற போர்வையில், அரசியல் அமைப்புகளை வற்புறுத்துவதன் மூலம், சட்டப்பூர்வத்தின் தவறான தோற்றத்தை முன்வைத்து, தங்கள் செல்வாக்கை செயற்கையாக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது. இதை ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.