ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதில் இந்தியா தனது முதல் உலகக்கோப்பையை அக்டோபர் 8 ஆம் தேதி சென்னையில் ஆஸ்திரேலியாவுடன் தொடங்கவுள்ளது. மேலும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை முன்னிட்டு இந்தியா விளையாட இருந்த முதல் பயிற்சி ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது. இந்த நிலையில் இரண்டாவது பயிற்சி ஆட்டம் தற்போது திருவனந்தபுரத்தில் நடைபெற இருக்கிறது.
இந்த போட்டியில் இந்திய அணி நெதர்லாந்தை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி வீரர்கள் அனைவரும் கவுகாத்தியில் இருந்து புறப்பட்டு திருவனந்தபுரத்திற்கு சென்றிருக்கிறார்கள்.
ஆனால் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மட்டும் அணியிலிருந்து பாதியில் விலகி மும்பைக்கு சென்றிருக்கிறார். விராட் கோலி தனிப்பட்ட காரணத்திற்காக தான் அணியை விட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது. எனினும் இது தொடர்பாக பிசிசிஐ இதுவரை எந்த ஒரு தனிப்பட்ட விளக்கத்தையும் தரவில்லை. உலகக் கோப்பை தொடர்க்கு முன் ஒரு வீரர் இப்படி பாதியில் அணியை விட்டு செல்வது ஏன் என்று இதுவரை இரசிகர்களுக்கும் தெரிவிக்கப்படவில்லை.
விராட் கோலி குடும்பத்தினருக்கு ஏதேனும் பிரச்சனையா என்று குறித்தும் தகவல் ஏதுமில்லை. இந்த உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்றால் அது விராட் கோலி கையில் தான் இருக்கிறது. ஆனால் விராட் கோலி இப்படி முக்கியமான கட்டத்தில் பாதியில் ஊர் திரும்பி இருப்பது அவருடைய இரசிகர்களையும் ஏமாற்றம் அடைய செய்திருக்கிறது.