உரிமை கேட்டு போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படமாட்டாது என பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் சம வேலைக்குச் சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 9 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக, 3 ஆயிரம் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் 2-ம் கட்ட எண்ணும் எழுத்தும் பயிற்சியைப் புறக்கணித்துவிட்டு, இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள் யார்யார், அவர்கள் பெயர் என்ன, அவர்களது பின்னணி என்ன, எத்தனை நாட்களாகப் பள்ளிக்கு வரவில்லை என்ற தகவல்களை எல்லாம் மாநில உளவுத்துறை மற்றும் சம்பந்தப்பட்ட பள்ளிகள் வாரியாக சேகரிக்கப்பட்டு வருகிறது.
மேலும், மாநிலம் முழுவதும் எண்ணும் எழுத்தும் பயிற்சி வகுப்பு நடைபெற்று வரும் நிலையில், இந்த பயிற்சியில் பங்கேற்காத இடைநிலை ஆசிரியர்கள், பணிக்கு வராத இடங்களை வைத்து ஆசிரியர்களின் விவரங்களைச் சேகரித்து சம்பளம் பிடித்தம் செய்யப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இடைநிலை ஆசிரியர்கள், நாங்கள் எங்கள் உரிமைக்காகப் போராடுகிறோம். எங்கள் கோரிக்கையில் நியாயம் உள்ளது. அதனால்தான் அரசால், மறுக்கமுடியவில்லை. போராட்டத்தை ஒடுக்கும் வகையில், பணிக்கு வராதவர்களுக்குச் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என மிரட்டுகின்றனர். எங்கள் கோரிக்கை நிறைவேறும்வரை போராட்டம் தொடரும் என்றனர் உறுதியாக.