கேரளாவில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் தேங்கியதோடு, சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதோடு, ஆறுகளில் நீர்மட்டம் அபாயக் கட்டத்தை எட்டியுள்ளது. மழையின் காரணமாக, பல்வேறு மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
கனமழையால் திருவனந்தபுரம் மாவட்டத்தில் பல வீடுகள், பல லட்சம் மதிப்பிலான பயிர்கள் சேதமானது. மேலும், ஆலப்புழா மாவட்டத்தில் குட்டநாடு பகுதியில் உள்ள சிறிய குக்கிராமமான எடத்துவாவில் பெய்த கனமழையால் நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.
திருவனந்தபுரம் நெய்யாற்றில் உள்ள அருவிப்புரம் நிலையத்தில் நீர்மட்டம் அபாய அளவை தாண்டியதால், மத்திய நீர் ஆணையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், கரமனா ஆற்றில் உள்ள வெள்ளைக்கடவ் நிலையம், அச்சன்கோவில் ஆற்றில் உள்ள தும்பமன் இரயில் நிலையம் மற்றும் மணிமாலா ஆற்றில் உள்ள கல்லுப்பாறை இரயில் நிலையம் ஆகிய இடங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் ஐந்து நாட்களுக்குக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், திருவனந்தபுரத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.