ஒரு நாள் கிரிக்கெட் உலகக்கோப்பைத் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடுகிறது.
13 வது ஒரு நாள் கிரிக்கெட் உலகக்கோப்பைத் தொடர் இன்று இந்தியாவில் தொடங்குகிறது. உலகளவில் உள்ள 10 நாடுகள் பங்கேற்கும் இந்த உலக கோப்பை தொடரில் முதல் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறயுள்ளது.
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் இறுதிப் போட்டிக்கு சென்ற இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் இந்த ஆண்டு முதல் போட்டியை விளையாடவுள்ளது. இரண்டு அணிகளும் பலம் வாய்ந்த அணிகள் என்பதால் முதல் போட்டியே விறுவிறுப்பாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இரண்டு அணிகளிலும் ஒரு முக்கிய வீரர் விளையாடப் போவதில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் விளையாடப் போவதில்லை. அவர் ஏற்கனவே கால் மூட்டு சிகிச்சை எடுத்து உலகக்கோப்பைத் தொடருக்கு முன்பு தான் அணிக்கு திரும்பினார்.
பயிற்சிப் போட்டியில் பேட்டிங் மட்டுமே செய்த கேன் வில்லியம்சன் பீல்டிங் செய்யவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு பேட்டிங் செய்த கேன் வில்லியம்சன் இரண்டு போட்டிகளிலும் கலக்கினார். அதனால், அவர் முதல் உலகக்கோப்பைப் போட்டியில் வலுவான இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதில் மாற்றம் நடந்துள்ளது.
அவர் தன் காயத்தை பெரிதாக்கிக் கொண்டால் அடுத்த போட்டிகளில் ஆட முடியாமல் போய்விடும் என்பதால் முதல் சில போட்டிகளில் ஆட மாட்டார் என கூறப்படுகிறது.
இது ஒரு பக்கம் இருக்க இங்கிலாந்து அணியில் முன்னணி வீரர் பென் ஸ்டோக்ஸ் இடுப்பில் ஏற்பட்ட காயத்தால் முதல் போட்டியில் இருந்து விலகி இருக்கிறார். கடந்த 2019 உலகக்கோப்பைத் தொடர் நாயகன் ஆன ஸ்டோக்ஸ் முதல் போட்டியிலேயே ஆடாதது கிரிக்கெட் இரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
மேலும் இந்தப் போட்டியின் வெற்றி வாய்ப்பு கணக்கெடுப்பில் 64% இங்கிலாந்து வெற்றிப் பெறும் என்றும் 36% நியூஸ்லாந்து வெற்றிப் பெறும் என்றும் இணையத்தில் பதிவிடப்பட்டுள்ளது.