திறன் மேம்பாட்டு திட்ட ஊழலில் கைதாகியுள்ள முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்றக் காவலை அக்டோபர் 19-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2014-17ம் ஆண்டு வரையிலான சந்திரபாபு நாயுடுவின் ஆட்சிக் காலத்தில், திறன் மேம்பாட்டு கழகத்தில் ரூ.317 கோடி ஊழல் நடந்ததாக கடந்த நாலரை ஆண்டுகளுக்கு முன் தொடரப்பட்ட வழக்கில், செப்டம்பர் 9 அதிகாலை நந்தியாலாவில் முன்னாள் ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித்தலைவரும், தற்போதைய ஆந்திர எதிர்க்கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடுவை சிஐடி போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சந்திரபாபு நாயுடு நீதிமன்றக் காவல் நிறைவடைந்ததை நிலையில் நேற்று மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை அக்டோபர் 19-ம் தேதிவரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
முன்னதாக தன் மீதான வழக்கை ரத்து செய்யும்படி உச்சநீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அனிருத்தா போஸ், எம்.திரிவேதி அமர்வு இடைக்கால ஜாமின் வழங்க மறுத்தது. விசாரணை அக்டோபர் 9ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.