தமிழக அரசு அலுவலங்களில் லஞ்சம் தலைவிரித்து ஆடும் நிலையில், ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய இராமநாதபுரம் ஆர்.எஸ்.மங்களம் தாசில்தார் தென்னரசு கைது செய்யப்பட்டுள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்களம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தாராக தென்னரசு பணிபுரிந்து வருகிறார். இவர் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியைச் சேர்ந்த கருப்பையா என்பவர் தனது பெயரில் உள்ள சுமார் 2 ஏக்கர் நிலத்திற்குப் பட்டா மாறுதல் செய்ய வேண்டும் அனுகியுள்ளார்.
பட்டா வழங்க வேண்டும் எனில், ரூ. 3 லட்சம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என வற்புறுத்தியுள்ளார். இதில் முதல் தவணையாக ஒரு லட்சம் ரூபாய் லஞ்சமாகக் கேட்டுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத கருப்பையா, இது தொடர்பாக, இராமநாதபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் இரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களைக் கொடுத்து அனுப்பிவிட்டு, தாசில்தார் அலுவலகம் அருகே மறைந்திருந்தனர்.
அப்போது, தாசில்தார் தென்னரசு, கருப்பையாவிடம் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கும் போது, காவல் ஆய்வாளர் இராஜேஸ்வரி தலைமையிலான லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக அரசில் லஞ்சம் அதிக அளவு நிலவி வருகிறது, ஏழை எளிய மக்கள் அரசின் திட்டங்களையும், உரிமைகளையும் பெறும்போது, அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது என பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர்.
இந்த நிலையில், அதனை உறுதி செய்யும் வகையில், தாசில்தார் ஒருவர் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாகப் பிடிபட்டுள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் உள்ள அரசு அலுவலங்களில் லஞ்சம் தலைவிரித்து ஆடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.