உலகக் கோப்பை கிரிக்கெட் பாகிஸ்தான், நெதர்லாந்து போட்டி இன்று நடைபெறுகிறது.
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் 2-வது லீக்கில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணி, நெதர்லாந்தை எதிர்கொள்கிறது.
ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில் படுதோல்வி, இரு பயிற்சி ஆட்டத்திலும் சறுக்கல் என்று உலகக் கோப்பைக்கு முன்பாக பாகிஸ்தானுக்கு எதுவும் திருப்திகரமாக அமையவில்லை. எனவே இன்றைய ஆட்டத்தை வெற்றியுடன் தொடங்கி உத்வேகத்தை பெற வேண்டிய நெருக்கடியில் பாகிஸ்தான் இருக்கிறது.
அந்த அணியில் கேப்டன் பாபர் அசாம், முகமது ரிஸ்வான், இப்திகர் அகமது நல்ல நிலையில் உள்ளனர். தொடக்க ஆட்டக்காரர் பஹர் ஜமான் சமீபகாலமாக ரன் எடுக்க முடியாமல் தடுமாறுவதால் அவருக்கு பதிலாக அப்துல்லா ஷபிக் சேர்க்கப்படலாம். பயிற்சி ஆட்டத்தை வைத்து பார்க்கும் போது இது மேலும் ஒரு அதிக ரன் குவிக்கப்படும் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பந்து வீச்சில் ‘ஸ்விங்’ தாக்குதலில் ஷகீன் ஷா அப்ரிடி அச்சுறுத்துவார். விக்கெட் எடுக்க முடியாத வறட்சியில் இருக்கும் சுழற்பந்து வீச்சாளர் ஷதப் கான் அதில் இருந்து மீள இந்த ஆட்டத்தை பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பார். மற்றபடி நெதர்லாந்துடன் ஒப்பிடும் போது பாகிஸ்தானின் கையே ஓங்கி நிற்கிறது.
இந்த உலகக் கோப்பைப் போட்டிக்கு தகுதிப் பெற்ற டெஸ்ட் அந்தஸ்து பெறாத ஒரே அணி நெதர்லாந்து தான். தகுதி சுற்றில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 374 ரன்கள் குவித்து சமன் செய்ததோடு, சூப்பர் ஓவரில் வாகை சூடி மிரட்டியது. ஆந்திராவில் பிறந்தவரான தேஜா நிதாமனுரு, லோகன் வான் பீக், பாஸ் டி லீட், வான்டெர் மெர்வ் உள்ளிட்டோர் அந்த அணியில் நம்பிக்கை நட்சத்திரங்களாக உள்ளனர். ஏதாவது பெரிய அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் முனைப்புடன் ஆயத்தமாகும் நெதர்லாந்து, முடிந்த வரை கடும் சவால் அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 6 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. 6 ஆட்டத்திலும் பாகிஸ்தானே வெற்றி கண்டுள்ளது. ஐதராபாத்தில் பயிற்சி ஆட்டத்தின் போது மழை குறுக்கிட்டது. ஆனால் இன்றைய நாளில் மழை ஆபத்து இல்லை. வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் வெற்றி வியப்பு கணக்கெடுப்பில் 92% பாகிஸ்தான் வெற்றி பெரும் என்றும் 8 % நெதர்லாந்து வெற்றி பெரும் என்றும் இணையத்தில் பதிவிபட்டுள்ளது.