2023-ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு, அமெரிக்காவைச் சேர்ந்த கிளாடியா கோல்டினுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு, உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது.
அதன்படி 2023-ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கும் பணி கடந்த 2-ஆம் தேதி தொடங்கியது. அந்த வகையில் கடந்த 2-ஆம் தேதி திங்கட்கிழமை மருத்துவத்துறைக்கான நோபல் பரிசும், செவ்வாய்க் கிழமை இயற்பியல் துறைக்கான நோபல் பரிசும், புதன் கிழமை வேதியியல் துறைக்கான நோபல் பரிசும், வியாழக்கிழமை இலக்கியத் துறைக்கான நோபல் பரிசும், வெள்ளிக்கிழமை அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டன.
இந்த நிலையில் இன்று, பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் கிளாடியா கோல்டினுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் பாலின இடைவெளியின் முக்கிய ஆதாரங்களை ஆய்வில் வெளிப்படுத்தியமைக்காகவும், பெண்களுக்கான தொழில் வாய்ப்புகள் தொடர்பான ஆய்வுகளுக்காகவும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.