பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் இன்று தனது 81-வது பிறந்த நாளை உற்சாகமாகக் கொண்டாடி வருகிறார். அவரது பிறந்த நாளையொட்டி, திரையுலக முன்னணி நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் அமிதாப் பச்சன், கடந்த 1969-ம் ஆண்டு திரையுலகில் நுழைந்தார். சாட்ஹிந்துஸ்தானி என்ற திரைப்படம் மூலம் தனது திரையுலக பயணத்தைத் தொடங்கினார். இவர் நடித்த முதல் திரைப்படத்திலேயே சிறந்த புதுமுக நடிகருக்கான தேசியத் திரைப்பட விருதை வென்றார்.
தொடர்ந்து, பல வெற்றிப் படங்களைக் கொடுத்தாலும், ஷோலே படம் அமிதாப் பச்சனுக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது. சிறந்த நடிகர் என்ற அந்தஸ்தையும் பெற்றுத்தந்தது.
இந்திய அரசு அவருக்கு 1984-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதை வழங்கி கௌரவித்தது. 2001-ல் பத்மபூஷன் விருது பெற்றார். 2015 -ம் ஆண்டு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. 2018 -ல் திரையுலகின் மிகப் பெரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது வழங்கி அவர் கௌரவிக்கப்பட்டார்.
இதுதவிர, 5 தேசிய திரைப்பட விருதுகள், 15 பிலிம்பேர் விருதுகள் மற்றும் சர்வதேச திரைப்பட விழாக்களில் பல்வேறு விருதுகளை அவர் குவித்துள்ளார்.
இந்த நிலையில், அவரது பிறந்த நாளையொட்டி, திரைத்துறையைச் சேர்ந்த பலரும் அவருக்கு அதிகாலை முதலே நேரிலும், போனிலும், சமூக வலைதளத்திலும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும், நடிகர் அமிதாப் பச்சனின் பிறந்த நாளை முன்னிட்டு இணையத்தில், #HappyBirthdayAmitabhBachchan என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.
மேலும், அமிதாப் பிறந்த நாளையொட்டி, kaun benega Crorepati season 15 நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.
பல திசைகளிலிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருவதால் நடிகர் அமிதாப் பச்சன் மகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீர் வடித்தார். இதனிடையே, சால்சா என்ற இடத்தில் உள்ள அவரது வீட்டு முன்பு நள்ளிரவில் ரசிகர்கள் குவிந்தனர். அப்போது, வெளியே வந்த அமிதாப், தனது ரசிகர்களைப் பார்த்து கையசைத்து உற்சாகப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து, ரசிகர்களின் வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார்.