தமிழகத்தில் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் உள்ளிட்ட 3 மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட 9 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தீடீரென பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாகத் தமிழக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில் ராஜ், சிப்காட் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், சென்னை மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு துணை ஆட்சியர் லட்சுமிபதி தூத்துக்குடி ஆட்சித் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சிப்காட் நிர்வாக இயக்குநர் சுந்தரவள்ளி, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி ஆணையர் வீரராகவ ராவ், தொழில்நுட்பக் கல்வி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்ட துணை ஆட்சியர் ஸ்ருதஞ்சய் நாராயணன், விழுப்புரம் மாவட்ட கிராமப்புற மேம்பாட்டு ஏஜென்சியின் திட்ட அதிகாரியாக பணியாற்றுவார். நகர்ப்புற வளர்ச்சி மேலாண்மை வாரிய இணை நிர்வாக இயக்குநர் தங்கவேல், கரூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல், வேலூர் மாநகராட்சி ஆணையர் ரத்தினசாமி, ராமநாதபுரம் மாவட்ட கிராமப்புற மேம்பாட்டு ஏஜென்சியின் திட்ட அதிகாரியாகச் செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.