மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் முதன்மையான நோய்த்தடுப்பு இயக்கமான இந்திரதனுஷ் 5.0 (ஐ.எம்.ஐ 5.0) அக்டோபர் 14 அன்று அனைத்து 3 சுற்றுகளையும் நிறைவு செய்கிறது.
ஐ.எம்.ஐ 5.0 வழக்கமான நோய்த்தடுப்பு சேவைகள் நாடு முழுவதும் விடுபட்ட மற்றும் கைவிடப்பட்ட குழந்தைகள் மற்றும் கருவுற்ற பெண்களைச் சென்றடைவதை உறுதி செய்கிறது.
இந்த ஆண்டு, முதல் முறையாக, நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் 5 வயது வரையிலான குழந்தைகளை உள்ளடக்கியதாக இந்த இயக்கம் நடத்தப்படுகிறது.
ஐ.எம்.ஐ 5.0 இயக்கம், தேசிய நோய்த்தடுப்பு அட்டவணையின் (என்.ஐ.எஸ்) படி அனைவருக்குமான நோய்த்தடுப்பு திட்டத்தின் (யுஐபி) கீழ் வழங்கப்படும் அனைத்து தடுப்பூசிகளுக்கும் நோய்த்தடுப்பு பாதுகாப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
2023 ஆம் ஆண்டிற்குள் தட்டம்மை மற்றும் ரூபெல்லா ஒழிப்பை நோக்கமாகக் கொண்டு தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசி செலுத்துவதை மேம்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.
நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் வழக்கமான நோய்த்தடுப்புக்கான யு-வின் டிஜிட்டல் தளத்தை சோதனை முறையில் பயன்படுத்துகிறது.
ஐ.எம்.ஐ 5.0 ஆகஸ்ட் 7 – 12, செப்டம்பர் 11-16, அக்டோபர் 9-14 என மூன்று சுற்றுகளாக நடத்தப்படுகிறது. அதாவது மாதத்தில் 6 நாட்கள் வழக்கமான நோய்த்தடுப்பு தினத்தை உள்ளடக்கியது.
பீகார், சத்தீஸ்கர், ஒடிசா, பஞ்சாப் தவிர அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் ஐஎம்ஐ 5.0 இயக்கத்தின் மூன்று சுற்றுகளையும் அக்டோபர் 14-ம் தேதிக்குள் நிறைவு செய்யும். இந்த நான்கு மாநிலங்களும் சில தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் ஆகஸ்ட் மாதத்தில் ஐஎம்ஐ 5.0 இயக்கத்தைத் தொடங்க முடியவில்லை. இந்த மாநிலங்கள் நவம்பர் மாதத்தில் 3-வது சுற்றை நிறைவு செய்யும்.
செப்டம்பர் 30-ந் தேதி நிலவரப்படி, நாடு முழுவதும் ஐஎம்ஐ 5.0 இயக்கத்தின் முதல் 2 சுற்றுகளில் 34,69,705 குழந்தைகள் மற்றும் 6,55,480 கருவுற்ற பெண்களுக்குத் தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.