பள்ளிக்கல்வித் துறையுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் டிபிஐ வளாகத்தில் திட்டமிட்டபடி அக்டோபர் 13 -ம் தேதி போராட்டம் நடைபெறும் என்று டிட்டோஜாக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், எண்ணும் எழுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும், எமிஸ் பதிவேற்றம் பணிகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோ ஜாக்) சார்பில் சென்னையில் அக்டோபர் 13 -ம் தேதி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன், பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் அறிவொளி, தொடக்கக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் ஆகியோர் சென்னை டிபிஐ வளாகத்தில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தையில், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் செ.முத்துசாமி, தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் மயில், தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் தாஸ், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கப் பொதுச்செயலாளர் ஜான் வெஸ்லி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய நிர்வாகிகள், நாங்கள் முன்வைத்த 30 கோரிக்கைகளில் 9 கோரிக்கைகளை மட்டும் நிறைவேற்ற கல்வித்துறை அதிகாரிகள் முன்வந்தனர். ஆனால், எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் வழங்க மறுத்துவிட்டனர். இதனால், 2 மணி நேரம் வரை நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதனால் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு தெரிவித்துள்ளன.