ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தனது 170 -வது படத்தில் இயக்குநர் த.செ ஞானவேலு இயக்கத்தில் நடிக்க உள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். லைகா தயாரிப்பில் அனிருத் இசையமைக்கும் இப்படம் 2024 -ம் ஆண்டு வெளியாக உள்ளது.
தனது 170-வது படத்தில் ரஜினியுடன், துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, ஃபகத் பாசில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதனால், படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு கேரளா திருவனந்தபுரம் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. தற்போது, 46 ஆண்டுகளுக்குப் பின்னர் திருநெல்வேலி வந்துள்ளேன் என ரஜினி பேசும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த நிலையில், கன்னியாகுமரியில் இப்படப்பிடிப்பின் இடைவேளையின்போது, ரஜினியை, பாஜக முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் சந்தித்தார். அப்போது, சில நிமிடங்கள் பேசினார். இந்த சந்திப்பு குறித்து, மரியாதை நிமித்தமாக ரஜினியைச் சந்தித்துள்ளதாகப் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.