சிவகாசி அருகே உள்ள எம்.புதுப்பட்டியில் உள்ள பிரபல தனியார் பட்டாசு ஆலையில் நேரிட்ட வெடி விபத்தில் 11பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சிவகாசியின் எம்.புதுப்பட்டியில் உள்ள ரெங்கபாளையத்தில் உள்ள பிரபல தனியார் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் இன்று காலை திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பட்டாசு ஆலையில் பணியாற்றிய 11 பேர் உயிரிழந்தனர்.
பட்டாசு ஆலை வெடி விபத்தில் பொன்னுத்தாய், சின்னதாய் ஆகியோர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்ததும், தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் விரைந்து சென்று, படுகாயம் அடைந்தவர்களை மீட்டு, மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். மேலும், விபத்து நடந்த ஆலையின் அறைக்குள் வேறு யாரேனும் சிக்கி இருக்கிறார்களா? எனத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து பட்டாசுகள் வெடித்து வருவதால் தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தாங்கள் தயாரித்த பட்டாசுகளைச் சோதனைக்காக வெடித்துப் பார்த்தபோது, அருகிலிருந்த பட்டாசுகளில் தீப்பற்றி விபத்து நிகழ்ந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
திமுக ஆட்சி அமைந்த பிறகு பட்டாசு ஆலைகளில் தொடர் விபத்து நிகழ்ந்து வருவதும், ஏராளமான மனித உயிர்கள் பலியாவதும் தொடர்கதையாகி வருகிறது. இது தொடர்பாக பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இருந்த போதும், மனித உயிர்கள் பலியாவதை தடுக்க போதிய ஆர்வம் காட்டவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.