வடகிழக்கு பருவமழை வரும் அக்டோபர் 22-ஆம் தேதி முதல் அக்டோபர் 25-ஆம் தேதிக்குள் தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மழை பொழிவைத் தரும் காலங்கள் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ காலம்தான். இதில், தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். தென்மேற்குப் பருவ மழையால் இந்தியாவில் 80 சதவீதத்திற்கும் அதிகமான பகுதிகளில் பயன் பெறுகின்றன.
தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை குறைந்த அளவு மட்டுமே வரும். மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய கன்னியாகுமரி, தேனி, நீலகிரி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, கோயம்புத்தூர் உள்ளிட்ட சில மாவட்டங்கள் மட்டுமே தென்மேற்குப் பருவ மழையால் கணிசமான மழை பெறுகிறது.
வடகிழக்குப் பருவமழை பொதுவாக அக்டோபர் மாதத்தில் தொடங்கி டிசம்பர் மாதம் வரை நீடிக்கும். வடகிழக்கு பருவமழை தமிழகத்துக்கு அதிக மழைப் பொழிவைத் தருகிறது. தமிழகம் வடகிழக்குப் பருவ மழையால் 60 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை மழை பெறுகிறது.
இந்த நிலையில், தமிழகத்திற்கு அதிக மழை பொழிவைத் தரும் வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும் என்பது குறித்து வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது, வடகிழக்கு பருவமழை வரும் அக்டோபர் 22-ஆம் தேதி முதல் அக்டோபர் 25-ஆம் தேதிக்குள் தொடங்கும். தமிழகத்திற்கு அதிக மழை பொழிவைத் தரும் வடகிழக்கு பருவமழை தொடங்கும் சாதகமான சூழல் நிலவுகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சராசரியாக அக்டோபரில் 177.2 மில்லி மீட்டர் மழையும், நவம்பரில் 178.8 மில்லி மீட்டர் மழையும், டிசம்பரில் 92 மில்லி மீட்டர் மழையும் பெய்வது இயல்பானதாகும். வடகிழக்கு பருவமழை காலத்தில் சராசரியாக 448 மில்லி மீட்டர் மழை பெய்யும்.