ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புதிதாக விஸ்டாடோம் கோச் இரயில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த இரயில் சேவையை மத்திய இரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் காணொளி காட்சி வாயிலாக கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
370-வது பிரிவை ரத்து செய்யப்பட்ட பிறகு, ஜம்மு காஷ்மீர் மாநிலம் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. அந்த வகையில், விரைவில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வந்தே பாரத் இரயில் இயக்கப்படும் என்று இரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புதிதாக விஸ்டாடோம் கோச் இரயில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. விஸ்டாடோம் கோச் என்பது பொழுதுபோக்கு மற்றும் இருக்கை போன்ற மேம்பட்ட அம்சங்களைக் கொண்ட அதிநவீன இரயிலாகும். இந்த இரயிலில், அகலமான கண்ணாடி ஜன்னல்கள், சுழலும் இருக்கைகள், தானியங்கி நெகிழ் கதவுகள், லக்கேஜ் ரேக்குகள், எல்.இ.டி. மற்றும் ஜி.பி.எஸ். தொழில்நுட்ட அமைப்பு ஆகிய வசதிகள் இருக்கும்.
மேலும், காஷ்மீரில் வரவிருக்கும் குளிர்காலத்தை சமாளிக்கும் வகையில், ஏர் கண்டிஷன் வசதியும் செய்யப்பட்டிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, இரயிலின் மேற்கூரை கண்ணாடியால் அமைக்கப்பட்டிருப்பதுதான் சிறப்பம்சமே. இதன் மூலம் 360 டிகிரியில் பள்ளத்தாக்கின் அழகை இரசிக்கலாம். இந்த விஸ்டாடோம் கோச் இரயிலில் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள் புதிய பயண சுகத்தை அனுபவிப்பார்கள். அதேபோல, பள்ளத்தாக்கு பகுதியில் நவீனகால பயண அனுபவத்தையும் அனுபவிப்பார்கள்.
இந்த இரயில் மூலம் புட்காம், காசிகுண்ட் மற்றும் பனிஹால் ஆகிய பகுதிகளின் இயற்கை அழகை மிக நெருக்கமாக உணர முடியும். குறிப்பாக, இந்த இரயிலில் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள், காஷ்மீர் மலைத்தொடர்கள், நெல் வயல்கள், ஆப்பிள் தோட்டங்கள், குங்குமப்பூ வயல்வெளிகள், பனி படர்ந்த பள்ளத்தாக்கு போன்ற அழகிய இடங்களை பரந்த தோற்றத்தில் கண்டு ரசிக்கலாம். சுருக்கமாகச் சொன்னால், காஷ்மீரில் சுவிச்சர்லாந்தின் அனுபவத்தை உணரலாம்.
இந்த இரயிலுக்கான கட்டணம் 930 ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இது மிகக் குறைந்த கட்டணம் என்பதால், பனியால் மூடப்பட்டிருக்கும் காஷ்மீர் பள்ளத்தாக்கின சுகத்தை அனுபவத்தைப் பெற மக்கள் தயாராகி வருகிறார்கள். மேலும், இந்த இரயில் ஆண்டு முழுவதும் இயங்கும் என்பதால், பள்ளத்தாக்கின் சுற்றுலாவை மேம்படுத்தவும் உதவும்.