சென்னையில் எத்தனையோ சிறப்பு மிக்க திருக்கோவில்கள் இருந்தாலும், மவுண்ட்ரோடு – சென்ரல் ரயில் நிலையம் இடையே பல்லவன் சாலையில் அமைந்துள்ள அருள்மிகு பாடிகாட் முனீஸ்வரர் திருக்கோவிலுக்குத் தனிச் சிறப்பு உண்டு.
காரணம், இந்த திருக்கோவிலில் வாகன ஓட்டிகளின் பாதுகாவலர் என்று சென்னைவாசிகளால் நம்பப்படுகிறது.
புதிதாக பைக், ஆட்டோ, டாக்ஸி என எந்த ஒரு வாகனமும் வாங்கினாலும், அவர்கள் அடுத்த நில நிமிடங்களில் செல்லும் இடம் அருல்மிகு பாடிகாட் முனீஸ்வரர் திருக்கோவில்தான்.
அது மட்டுமல்ல, திருணம், காது குத்து, கிரகக்கபிரவேஷம் என எந்த ஒரு முக்கிய நிகழ்வுக்கும் வாகனத்தில் செல்வோர் மற்றும் வெளியூர்களுக்கு நெடுந்தூரம் பயணம் செல்வோர் என அனைவரும் இந்த திருக்கோவிலுக்கு வந்து பூஜை செய்துவிட்டே பயணத்தைத் தொடர்வது வழக்கம்.
பெரிய பெரிய திருக்கோவில் போல் இங்கு கலை ஓவியங்களோ அல்லது பெரிய தூண்களோ எல்லாம் இல்லை. ஒரு சிறிய அறை. அதற்குள் அருள்மிகு ஸ்ரீபாடிகாட் முனீஸ்வரர் சன்னதி அமைந்துள்ளது. சன்னதி உள்ளே அரிவாள் ஏந்திய சிலை உள்ளது. பக்தர்கள் தங்கள் வாகனங்களின் சாவியைத் திருக்கோவிலின் பூசாரியிடம் கொடுத்து ஆசி பெறுகின்றனர்.
இந்த திருக்கோவில் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் அலங்கரிக்கப்பட்டு எலுமிச்சை, கற்பூரம், பூ, தேங்காய் உள்ளிட்ட பொருட்களையும், மலர் மாலை அணிவித்தும் அலங்காரம் செய்கின்றனர். மேலும், வாகனத்தின் முன்பு திருஷ்டிக்காக கருப்பு கயிறு கட்டுகின்றனர். தேங்காய் உச்சியில் கற்பூரத்தை ஏற்றிவைத்து, அதை வாகனத்தின் முன்புறம் தங்கள் உரிமையாளருடன் சேர்ந்து சுழற்றி வழிபாடு நடத்துகின்றனர்.
பின்னர், வாகனத்தைச் சுற்றிச் தேங்காய் உடைக்கின்றனர். வாகனத்தின் டயர்களுக்கு அடியில் எலுமிச்சை பழங்கள் வைக்கப்பட்டு அதன் மீது வாகன உரிமையாளர் ஓட்டுவார்கள். இதனால், வரும் காலத்தில் வாகனத்திற்கும் உரிமையாளருக்கும் எந்த ஒரு தீங்கு விளையாது என்று நம்புகின்றனர்.
இங்கு சராசரியாக ஒரு நாளைக்கு 100 முதல் 200 வரையிலான வாகனங்கள் பூசை போடப்படும், ஆனால், பௌர்ணமி, அமாவாசை மற்றும் விசேஷ நாட்களிலும் வார இறுதி நாட்களிலும் இந்த எண்ணிக்கை 300 தாண்டும் என்கின்றனர் பூசாரிகள்.
சிறிவர்கள் முதல் பெரியவர்கள் வரை எந்த ஒரு வித்தியாசமும் இல்லாமல் இந்த திருக்கோவில் முன்பு பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
நமக்கு ஒருவரை பாடிகாட்டாக நியமித்துவிட்டால், அவர் நமது பாதுகாப்பில் எப்படி மிகுந்த அக்கறை செலுத்துவரோ அதுபோல், இந்த பாடிகாட் முனிஸ்வரரை சரண் அடைந்துவிட்டால், அவர் நமக்கு பாடிகாட்டாக வருவார் என்பது பக்தர்களின் அசைச்சக்க முடியாத நம்பிக்கை. இதற்த இங்கு வரிசை கட்டி நிற்கும் வாகனங்களே சாட்சி.