ஒரு நாள் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய போட்டி டெல்லியில் ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கிடையே நடைபெறுகிறது.
ஆஸ்திரேலியா விளையாடிய முதல் 4 லீக் போட்டிகளிலும் தலா 2 வெற்றி மற்றும் 2 தோல்விகளை பதிவு செய்துள்ளது. குறிப்பாக கடைசியாக விளையாடிய இரண்டு லீக் போட்டிகளிலும் அபார வெற்றிகளை பெற்று இருப்பது அந்த அணிக்கு ஊக்கம் அளித்துள்ளது.
நெதர்லாந்து ஒரு வெற்றியையும், 3 தோல்விகளையும் பெற்றுள்ளது. அதேநேரம், நடப்புத் தொடரில் வலுவாக உள்ள தென்னாப்ரிக்காவை வீழ்த்திய ஒரே அணி என்ற நம்பிக்கையுடன் நெதர்லாந்து அணி இன்று களமிறங்குகிறது.
இந்திய மைதானத்தில் முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி தோல்வியை தழுவினாலும், கடைசி இரண்டு போட்டியில் மீண்டு வந்துள்ளது. ஓபனிங் பேட்ஸ்மேன் வார்னர் அபாரமான ஃபார்மில் உள்ளார். மற்ற வீரர்கள் நிலையாக ரன் குவிக்க முடியாமல் தடுமாறி வருகின்றனர். வேகப்பந்துவீச்சில் உலகத் தரம் வாய்ந்த வீரர்கள் இருப்பினும், அவர்கள் நடப்பு தொடரில் சிறப்பாக செயல்படாதது ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
நெதர்லாந்து அணிக்கு சர்வதேசப் போட்டிகளில் போதிய அனுபவம் இல்லாவிட்டாலும், விளையாடும் அனைத்து போட்டிகளிலும் முழு திறமையை வெளிப்படுத்துகின்றனர். ஏதாவது ஒரு பேட்ஸ்மேனை மட்டும் நம்பி இருக்காதது அந்த அணியின் பலமாக கருதப்படுகிறது. பந்துவீச்சிலும் இளம் வீரர்கள் நம்பிக்கை அளிக்கும் விதமாக செயல்படுகின்றனர். இதனால், ஆஸ்திரேலிய அணிக்கு அதிர்ச்சி தரவும் வாய்ப்புள்ளது.
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் இதுவரை 2 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அனைத்திலும் நெதர்லாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியே வெற்றி பெற்றுள்ளது.
டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானம் பொதுவாக பேட்டிங்கிற்கு சாதகமாக அமைகிறது. குறுகிய எல்லைகளை கொண்டுள்ளதால் எளிதில் பவுண்டரி மற்றும் சிக்சர்களை விளாசலாம். அதேநேரம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அணுகூலமாக உள்ளது. டாஸ் வென்றவர்கள் முதலில் பேட்டிங் தேர்வு செய்து கடினமான இலக்கை நிர்ணயிக்கவே விரும்புவார்கள்.
மேலும் வெற்றி வாய்ப்பு கணக்கெடுப்பில் ஆஸ்திரேலியா 93% வெற்றி பெரும் என்றும் நெதர்லாந்து 7% வெற்றி பெரும் என்றும் இணையத்தில் பதிவிடப்பட்டுள்ளது.