தமிழகத்தின் தென்மாவட்டத்தில் மிகப் பெரிய நகரமான மதுரையில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் நவராத்திரி உற்சவ விழா பிரமாண்டமாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், நவராத்திரி விழா கடந்த 26 -ம் தேதி துவங்கியது. நவராத்திரியையொட்டி அம்மன் சன்னதியில் 2 -ம் பிரகாரத்தில் கொலு அரங்கு அமைக்கப்பட்டது. மேலும், தினமும் பல்வேறு அலங்காரங்களில் மீனாட்சி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாளித்தார்.
இந்த நிலையில் நவராத்திரி உற்சவத்தின் நிறைவு விழாவான விஜயதசமி அன்று, வீணை வழிபாட்டு மன்றத்தின் சார்பில் 108 வீணை இசை வழிபாடு நடைபெற்றது.
இதில், சென்னை, திருச்சி, தஞ்சை, விருதுநகர், திருநெல்வேலி என பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாட்டிலிருந்தும் இசைக் கலைஞர்கள் வருகை தந்திருந்தனர். அவர்கள் அனைவரும் பல்வேறு பக்தி பாடல்களை இசைத்து சரஸ்வதிக்குப் புகழ் மாலை சூட்டினர்.
இந்த வீணை இசை வழிபாட்டில் பள்ளி, கல்லூரி மாணவிகளும் கலந்து கொண்டு இசை வழிபாடு நடத்தினர். இந்த நிகழ்ச்சியால் மதுரை மாநகரமே இசை வெள்ளத்தில் மிதந்தது.