ஒரே பொய்யை சொல்லிச் சொல்லி திமுக தமிழகத்தில் 70 ஆண்டு காலமாக அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள் என தமிழக பாஜக தலைவர் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை மொடக்குறிச்சியில் நேற்று நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,
ஈரோடு மாவட்டம் காவிரிக் கரையில் அமைந்துள்ள குலவிளக்கு அம்மன் கோவில், சுற்றியுள்ள 18 கிராம மக்களின் குலதெய்வமாகும். இந்தக் கோவிலை திமுகவின் சுப்புலட்சுமி ஜெகதீசன் குடும்பத்தார் ஆக்கிரமித்து அவர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள்.
கோவில் கதவில் பெரியார், அண்ணா, தெரேசா உருவத்தை வரைந்து, கோவிலின் புனிதத்தைக் கெடுத்திருக்கிறார்கள். இதனால் தான், தமிழக பாஜக தொடர்ச்சியாக இந்து அறநிலையத்துறையின் பிடியில் இருந்து கோவில்களை விடுவிக்க வேண்டுமென்கிறோம்.
தமிழகத்தில் அதிகமாக புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் மாவட்டம் ஈரோடு ஆனால் ஈரோட்டில் ஒரு புற்றுநோய் மருத்துவமனை இல்லை. ஈரோட்டில் இருந்து பாஜக பாராளுமன்ற உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படும்போது, அவர் செய்யக்கூடிய முதல் வேலை ஈரோட்டுக்கு ஒரு புற்றுநோய் மருத்துவமனையை… pic.twitter.com/4CFXYi8jFI
— K.Annamalai (@annamalai_k) October 25, 2023
மத்திய அரசு விவசாயிகளிடமிருந்து அரிசியை 34 ரூபாய்க்கு கொள்முதல் செய்து அதில் 32 ரூபாய் மானியம் கொடுத்து இங்குள்ள ரேஷன் கடைகளுக்கு கொடுக்கிறது. ஆனால், தஞ்சை நெற்களஞ்சியத்தில் இருக்கக்கூடிய விவசாயிகள் ஒரு மூட்டை நெல்லை கொண்டு போனால் 60 ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொண்டே நெல் கொள்முதல் செய்கிறார்கள்.
விவசாயிகள் விரோத ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது திமுக. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நெசவாளர்களுக்கு என்று தனி கூட்டுறவு வங்கி தொடங்கும் என்று சொன்னார்கள். பள்ளி சீருடை நெசவாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் என்று சொன்னார்கள்.
ஆனால் வாக்குறுதிகள் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை. மின்சாரக் கட்டணம் 15 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை உயர்ந்து இருக்கிறது. மின் கட்டண உயர்வால் நெசவுத்தொழில் செய்ய முடியவில்லை.
அது போக, மூலப்பொருட்கள் விலை உயர்வும் நெசவாளர்களை வாட்டுகிறது. தமிழக பாஜக மட்டுமே, நெசவாளர்களுக்கு உறுதுணையாக இருந்து, பஞ்சு, நூல் விலை என்று ஒவ்வொன்றுக்கும் போராடிக் கொண்டிருக்கிறது.
2009 ஆம் ஆண்டு, மங்களூர் – கொச்சின் இடையே குழாய் மூலம் கெயில் எரிவாயு திட்டம் கொண்டு வரப்பட்டது. அப்பொழுது தமிழகத்தில் இருந்து திமுக காங்கிரஸ் கட்சிகளின் எட்டு மத்திய அமைச்சர்கள் இருந்தார்கள்.
இந்த குழாய் எரிவாயுத் திட்டம், ஈரோடு, கரூர் சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள விளைநிலங்களின் இடையே செல்லும் வகையில் இருந்தது. இதை எதிர்த்து மக்கள் குரல் கொடுத்த பிறகு 2014 ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியில் இந்த குழாய்கள், சாலைகளின் வழியே அமைக்கப்படும் என்று சொன்னார்கள்.
அதே வாக்குறுதியைத் தான் 2016 தேர்தலிலும், 2021 தேர்தலிலும் சொன்னார்கள். இவர்கள் கையெழுத்து போட்டுக் கொண்டு வந்த திட்டத்தையே பின்னர் எதிர்த்து அரசியல் செய்து மக்களை ஏமாற்றுவார்கள். 2009ல் மத்திய காங்கிரஸ் திமுக ஆட்சியில், திமுகவை சேர்ந்த அமைச்சர் காந்தி செல்வன் தான் நீட் மசோதா தாக்கல் செய்தார்.
தற்போது, திமுகவின் பட்டத்து இளவரசர் நீட்டுக்கு எதிராக 50 லட்சம் கையெழுத்தை வாங்க கிளம்பி இருக்கிறார். ஒரே பொய்யை சொல்லிச் சொல்லி திமுக தமிழகத்தில் 70 ஆண்டு காலமாக அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒன்றரை கோடி தொண்டர்கள் இருப்பதாகக் கூறிக்கொள்ளும் திமுகவில் 50 லட்சம் கையெழுத்து வாங்குவது சாதனையா? உதயநிதி இன்று முட்டை மந்திரவாதியை போல முட்டையை கையில் வைத்துக் கொண்டு நீட் தேர்வை ரத்து செய்வேன் என்று சுற்றிக் கொண்டிருக்கிறார். யாரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழகத்தில் அதிகமாக புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் மாவட்டம் ஈரோடு ஆனால் ஈரோட்டில் ஒரு புற்றுநோய் மருத்துவமனை இல்லை. ஈரோட்டில் இருந்து பாஜக பாராளுமன்ற உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படும்போது, அவர் செய்யக்கூடிய முதல் வேலை ஈரோட்டுக்கு ஒரு புற்றுநோய் மருத்துவமனையை கொண்டுவருவதாகத்தான் இருக்கும்.
பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில், தமிழ்நாடு பாசன அடிப்படையில் நாட்டில் மூன்றாவது பெரிய மாநிலமாக இருந்தது தற்பொழுது பதினோராம் இடத்தில் உள்ளது. மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்கும்போது. நதிகள் இணைப்பை நிச்சயம் செயற்படுத்துவார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில், மொடக்குறிச்சி பாஜக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சிகே சரஸ்வதி 13 அரசுப் பள்ளிகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறை, பொது சுகாதார வளாகம், ஆதிதிராவிடர் சமுதாயக்கூடம், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு கலையரங்கம், குழாய்க் குடிநீர் வசதி, அங்கன்வாடி கட்டிடம் கட்டுவது, பாலம் அமைப்பது, மின்விளக்கு அமைப்பது, கான்கிரீட் சாலை அமைத்து தருவது என்று சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி, ஆறு கோடி ரூபாய் முழுவதையும் மக்களுக்காக பயன்படுத்தியுள்ளார்.
வரும் பாராளுமன்ற தேர்தலில், சந்தர்ப்பவாத, மக்கள் விரோத திமுக கூட்டணிக் கட்சிகளை முழுமையாகப் புறக்கணிப்போம். மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நல்லாட்சி தொடர, தமிழகம் முழுவதும் பாஜக கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்போம் எனத் தெரிவித்தார்.