இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில், ஹமாஸ் தீவிரவாதிகளின் 150 பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
கடந்த 7-ம் தேதி இஸ்ரேல் மீது காஸாவின் ஹமாஸ் தீவிரவாதிகள் திடீர் தாக்குதலை நடத்தினர். இதில், 1,400 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு, ஹமாஸ் தீவிரவாதிகள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பதிலடி கொடுத்துவரும் இஸ்ரேல், உளவுத்துறை கொடுக்கும் தகவலின் அடிப்படையில் ஹமாஸ் தீவிரவாதிகளின் இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி அழித்து வருகிறது.
அந்த வகையில், ஏற்கெனவே ஹமாஸ் தீவிரவாதிகளின் தலைமையகம் உட்பட முக்கிய இலக்குகளை தாக்கி அழித்த இஸ்ரேல் இராணுவம், கடந்த வாரம் ஹமாஸ் தீவிரவாதிகளின் 400 இலக்குகளை குறிவைத்து தாக்கி அழித்தது. இதில், ஹமாஸ் தீவிரவாத முகாம்கள், தலைவர்களின் வீடுகள், மசூதிகள் உள்ளிட்டவை அடங்கும். இத்தாக்குதலில் ஹமாஸ் தீவிரவாதிகளின் 3 படைப் பிரிவுகளின் முக்கியத் தளபதிகள் 3 பேர் உட்பட கணிசமான தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில், நேற்று இரவு நடத்திய வான்வழித் தாக்குதலில், ஹமாஸ் தீவிரவாதிகளின் 150 பதுங்குக் குழிகளை அழித்திருப்பதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்திருக்கிறது. மேலும், இத்தாக்குதலில் ஹமாஸ் தீவிரவாதிகள் பலரும் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து இஸ்ரேல் இராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவலில், “இஸ்ரேலிய விமானங்கள் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் தீவிரவாதிகளின் 150 பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டன.
இத்தாக்குதலில், ஹமாஸ் தீவிரவாதிகளின் கடற்படைத் தளபதி மற்றும் விமானப்படைத் தளபதி ஆகியோர் கொல்லப்பட்டனர். அதேபோல, இஸ்ரேலின் காலாட் படைகள் மற்றும் பீரங்கி படைகள் தரைவழித் தாக்குதலிலும் ஈடுபட்டது. இதில், ஹமாஸ் தீவிரவாதிகள் பலர் கொல்லப்பட்டனர்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.