பெங்களூரில் வீரபத்ரா நகர் பேருந்து நிலையத்தை ஒட்டிய, பேருந்து பணிமனை ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், அங்கு நிறுத்திவைக்கப்பட்ட 40-க்கு மேற்பட்ட பேருந்துகளில், 18-க்கும் மேற்பட்ட பேருந்துகள் எரிந்து சேதமடைந்தன.
கர்நாடக மாநிலம் பெங்களூரு வீரபத்ரா நகர் பேருந்து நிலையம் அருகே உள்ள பேருந்து பணிமனை ஒன்றில், 40-க்கும் மேற்பட்ட பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இங்கு திடீரென தீவிபத்து ஏற்பட்டு, ஒன்றன்பின் ஒன்றாக பேருந்துகள் எரிய தொடங்கி உள்ளது. இதுகுறித்து, அப்பகுதியில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த, தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து, முழுவிவரம் இன்னும் வெளியாகவில்லை. சம்பவம் நடந்த இடம் திறந்தவெளி என்பதால், அங்கிருந்தவர்கள் உடனடியாக அந்த இடத்தைவிட்டு வெளியேறிவிட்டனர். இதனால், நல்லவேளையாக எந்தவோர் உயிர்ச்சேதமோ, காயமோ ஏற்படவில்லை. அதேசமயம், சுமார் 18-க்கும் மேற்பட்ட பேருந்துகள் தீயில் கருகியதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து தீயணைப்புத்துறையின் மூத்த அதிகாரி கூறியதாவது, தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருவதாகவும், தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் கூறினார்.