இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் முக்கியத் தலைவர் மற்றும் தீவிரவாதிகள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கிறார்கள். மேலும், ஹமாஸ் தீவிரவாதிகளின் உள்கட்டமைப்பு வசதிகளும் சேதமடைந்ததாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்திருக்கிறது.
இஸ்ரேல் மீது காஸா நகரின் ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி திடீரென ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். மேலும், இஸ்ரேலுக்குள் ஊடுருவிய தீவிரவாதிகள், கண்ணில் கண்ட அனைவர் மீதும் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தனர். மேலும், 200-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.
இதையடுத்து, ஹமாஸ் தீவிரவாதிகள் நினைத்துக்கூட பார்த்திராத அளவுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. இஸ்ரேல் விமானப்படை நடத்திய குண்டு மழையில் காஸா நகரமே உருக்குலைந்து போய்க் கிடக்கிறது. ஹமாஸ் தீவிரவாதிகளின் தலைமையகம் உள்ளிட்ட 600-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளின் இலக்குகளை இஸ்ரேல் தரைமட்டமாக்கி இருக்கிறது.
26-வது நாளாக இன்றும் தாக்குதல் தொடர்ந்து வருகிறது. இந்த சூழலில், நேற்று இரவு இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் முக்கியத் தளபதி இப்ராஹிம் பியாரி மற்றும் 50-க்கும் மேற்ப்டட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்திருக்கிறது.
இதுகுறித்து இஸ்ரேல் இராணுவம் வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், “அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டவர் அந்த அமைப்பின் முக்கிய தளபதி இப்ராஹிம் பியாரி. இவர், இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கிறார்.
மேலும், இத்தாக்குதலில் ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்த 50 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதோடு, அவ்வமைப்பின் அலுவலகம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளும் தரைமட்டமானது” என்று தெரிவித்திருக்கிறது. எனினும், காஸா முனையில் அகதிகள் அதிகம் வசிக்கும் முகாம் மீது இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியதாகவும், இதில் 50 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்ததாகவும் சர்வதேச ஊடகம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல, காஸா நகர சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், விமானப்படை தாக்குதலில் 50 பேர் உயிரிழந்ததாகவும், 150 பேர் படுகாயமாடைந்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.