கர்நாடகா மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையில், காவிரி ஆற்றுக்கு நீர் திறப்பது 9 -வது நாளாக நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கு விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு கடந்த மாதம் நடந்த காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் உத்தரவிடப்பட்டது. இதையடுத்து கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தமிழகத்துக்கு 3 ஆயிரம் கன அடி நீரை கர்நாடக அரசு திறந்துவிட்டது.
இந்த நிலையில், கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு 9 -வது நாளாக நிறுத்தப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்ட நிலையில் கால்வாயில் 567 கனஅடி தண்ணீர் மட்டுமே திறக்கப்படுகிறது.
கபினி அணையிலிருந்து தொடர்ந்து 300 கன அடி தண்ணீர் மட்டுமே காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், புது டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையம் இன்று கூடுகிறது. காவிரி மேலாண்மை ஆணையம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் இன்று பிற்பகலில் கூடுகிறது.
தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 2,600 கனஅடி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், தமிழகத்திற்குத் தண்ணீர் தரமுடியாது எனக் கர்நாடகா அரசு பிடிவாதம் செய்து வருகிறது.
கர்நாடகா அரசின் இந்த மனிதநேயமற்ற செயலால் காவிரி விவசாயிகள் பெரும் சோகத்தில் உள்ளனர்.