தமிழகத்தில், ஆளுநரும், முதல்வரும் அமர்ந்து பேசவேண்டும் என தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் தனியார் கல்லூரி நிகழ்சியில் கலந்து கொள்ள தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் வருகை தந்தார்.
முன்னதாக, மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், புதிய கல்விக் கொள்கை எல்லா மாநிலங்களிலும் சிறப்பாகச் செயல்படுத்தப்படுகிறது.
வகுப்பு அறையில் உள்ள மாணவர்களை உலக அளவிற்கு உயர்த்துவதுதான் புதிய கல்விக் கொள்கை. ஆனால், அது தமிழகத்தில் அரசியலாக்கப்பட்டுள்ளது. நீட் மற்றும் புதிய கல்விக் கொள்கையை ஏற்க மாணவர்கள் ஆர்வமுடன் உள்ளனர். ஆனால், இதர மாநிலங்களைவிடத் தமிழகத்தில் கல்வியில் அரசியல் தலையீடு அதிகமாக உள்ளது, இது தவிர்க்கப்பட வேண்டும்.
ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து நீட்டிற்கு என்றார்கள். ஆனால், இப்போது, நீட்டிற்கு கையெழுத்து எதிராக இயக்கம் நடத்துகிறார்கள். பொய் சொல்லி ஆட்சிக்கு வந்துவிட்டு, நீட் தெரியாதவர்களிடம் கையெழுத்து வாங்கி வருகிறார்கள்.
மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் தற்போது சிறப்பாகச் செயல்படுகிறது. தம்பி உதயநிதி அவர்களே, நீங்கள் முட்டையைத் தூக்கிக் காண்பித்தீர்கள். ஆனால், ஈரோட்டில் குழந்தைகளுக்கு கொடுக்க வைத்திருந்த 1,200 முட்டைகள் அழுகி இருந்ததால், குழந்தைகளுக்குக் கொடுக்க முடியவில்லை. அது உங்களுக்குத் தெரியுமா. முதலில் அதைக் கவனியுங்கள்.
கண்டதேவி கோவில் தேரோட்டம் நடத்தாதது குறித்து நீதிமன்றமே கடும் விமர்ச்சனம் செய்துள்ளது. இந்துக்களின் நம்பிக்கையுடன் எது நடைபெற்றாலும் கலவரம் என்று முத்திரை குத்துவதை விட்டுவிட்டு, தமிழகத்தில் சாதிய வன்கொடுமையை ஒழிக்க முயற்சி செய்யுங்கள்.
முதலமைச்சர் 13 மொழிகளில் பேசுவதாகப் பெருமை கொள்கின்றனர். முதலில் பட்டியல் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தடுக்கப்பாருங்கள்.
தமிழகத்தில், ஆளுநரும், முதல்வரும் அமர்ந்து பேசவேண்டும். அரசியல் அமைப்புச் சட்டத்தில் 167-வது பிரிவின்படி எந்த பிரச்சினையாக இருந்தாலும், அதை ஆளுநரிடம் விவாதிக்கலாம்.
நட்புறவுடன் கூடிய அணுகுமுறையைத் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை, விருந்திற்கு அழைத்தால் கூட புறக்கணிக்கிறார்கள். புதுச்சேரியில்கூட காங்கிரஸ், தி.மு.க-வினர் வரமாட்டோம் என்று சொல்வது நல்ல பழக்க வழக்கம் அல்ல என்றார்.