சென்னையில் ஹவாலா பணம் ரூ.1 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக இலங்கைத் தமிழர் உள்ளிட்ட 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை கே.கே.நகர் ஆற்காடு சாலையில் ஒரு கார் வழக்கத்தைவிட மிக வேகமாகச் சென்றுள்ளது. இதனால், சந்தேகம் அடைந்த போலீசார் அந்த காரை பின்தொடர்ந்து, தடுத்து நிறுத்தி, கார் முழுவதும் சோதனை செய்துள்ளனர்.
இந்த சோதனையில், ஆவணங்கள் ஏதும் இன்றி காரில் ரூ.1 கோடி பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், அந்த பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
காரில் பணம் கொண்டு சென்ற இலங்கைத் தமிழர் கமலநாதன், மடிப்பாக்கம் வெங்கடகிருஷ்ணன், மயிலாடுதுறை கார்த்திகேயன், கள்ளக்குறிச்சி கார்த்திகேயன் ஆகிய 4 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1 கோடி பணத்தை, வருமான வரித்துறையிடம் போலீசார் ஒப்படைத்துள்ளனர்.
தற்போது, திமுக அமைச்சர்கள், திமுக பிரமுகர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், இந்த பணத்திற்கும், அந்த சோதனைக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ என்ற கோணத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணையில் குதித்துள்ளனர்.