சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள பல்வேறு இடங்களில் இன்று பரவலாக மழை பெய்தது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொருத்த வரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் இன்று மழை பெய்தது. சென்னையில் குறிப்பாக, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், கோயம்பேடு, போரூர், தி.நகர், வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
மழையின் காரணமாக, சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். மேலும், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால், மக்கள் சிரமம் அடைந்துள்ளனர். சென்னையில் பல சாலைகள் குண்டும், குழியுமாக இருப்பதால், விபத்துகள் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.