தீபாவளி பண்டிகை விடுமுறையை நவம்பர் 13-ஆம் தேதியாக மாற்றி ஆந்திர அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதேபோல், புதுச்சேரியிலும் நவம்பர் 13-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வருகிற 13-ஆம் தேதியை பொது விடுமுறையாக அறிவித்து தலைமைச் செயலாளர் கே.எஸ். ஜவஹர் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். முன்னதாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளின்படி, 12-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளி விடுமுறை என்று குறிப்பிடப்பட்டது.
ஆனால் தற்போது, பொது விடுமுறை மற்றும் விருப்ப விடுமுறை பட்டியலில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, விருப்ப விடுமுறைக்குப் பதிலாக 13-ஆம் தேதி பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், புதுச்சேரியில் தீபாவளிக்கு மறுநாளான நவம்பர் 13-ஆம் தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையானது வருகின்ற நவம்பர் 12-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. ஞாயிற்றுக்கிழமை என்பதால், திங்கட்கிழமை வழக்கம்போல் பள்ளி, அலுவலகங்கள் செயல்படும் சூழல் உள்ளது. இதன் காரணமாக, பண்டிகை நாளன்று இரவே சொந்த ஊர்களில் இருந்து புறப்பட வேண்டியுள்ளதால், திங்கட்கிழமை பொது விடுமுறை அளிக்க கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை அடுத்து, புதுச்சேரியில் நவம்பர் 13-ஆம் தேதி பொது விடுமுறை அளிப்பதாக முதல்வர் இரங்கசாமி தெரிவித்துள்ளார்.