தென்னாப்பிரிக்காவின் போக்குவரத்து அமைச்சர் சிண்டிசிவே சிக்குங்கா ( Sindisiwe Chikunga), நாடாளுமன்றக் கூட்டத்தில் பேசுகையில், வெடித்த டயரை மாற்றுவதற்காக நெடுஞ்சாலையில் வாகனத்தை நிறுத்தியபோது, துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறினார்.
திங்கட்கிழமை (நவம்பர் 6-ஆம் தேதி) அதிகாலை, தென்னாப்பிரிக்க போக்குவரத்து அமைச்சர் சென்ற காரின் டயர் வெடித்துள்ளது. அமைச்சரின் பாதுகாவலர்கள் வெடித்த டயரை மாற்றுவதற்காக காரில் இருந்து கீழே இறங்கி உள்ளனர். அப்போது, காரை நெருங்கிய முகமூடி அணிந்த கொள்ளை கும்பல் ஒன்று, பாதுகாவலர்களே கீழே தள்ளிவிட்டு, கார் கதவைத் திறந்துள்ளது. கொள்ளையர்கள் பணம் கேட்டு அமைச்சரின் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டி உள்ளனர். ஆனால், அமைச்சர் தன்னிடம் பணம் எதுவும் இல்லை என்று கூறி உள்ளார்.
இதை அடுத்து, கொள்ளை கும்பல், காரில் இருந்த தொலைப்பேசி, மடிக்கணினிகள் மற்றும் பாதுகாவலர்களின் ஆயுதங்களைத் திருடியது. தொடர்ந்து, கொள்ளையர்கள் அமைச்சரின் கையிலிருந்த மோதிரத்தையும் திருட முயன்றனர். அப்போது தன்னுடைய மறைந்த கணவரின் ஞாபகமாக இருக்கும் ஒரே விஷயம் இதுதான் என்று அமைச்சர் கூறி உள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் கூறுகையில், “நாங்கள் நலமாக இருக்கிறோம், ஆரோக்கியமாக இருக்கிறோம், உயிருடன் இருக்கிறோம். இது ஒரு பயங்கரமான அனுபவம். ஆனால் கடவுள் எங்கள் மீது கருணை காட்டி உள்ளார் என்று கூறினார்.
ஆயுதமேந்திய பாதுகாவலர்களுடன் சென்ற அமைச்சர் ஒருவரிடம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.